குடும்ப அரசியலில் சிக்கித் தவிக்கும் தேவகவுடா; வாரிசுகளின் ஆட்டத்தால் ஜேடிஎஸ்க்கு எழுதப்படுகிறதா முடிவுரை?

By Dhanalakshmi G  |  First Published May 2, 2024, 5:29 PM IST

கர்நாடகா மாநிலத்தில் அசைக்க முடியாத அரசியல் தலைவராக தற்போது வரை இருந்து வருபவர் ஜேடிஎஸ் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவ கவுடா. இவரது வாரிசுகள் பற்றி தொடர்ந்து வெளியாகி வரும் சர்ச்சைகள் கர்நாடகாவில் ஜேடிஎஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. 


கர்நாடகா அரசியலில் தேவ கவுடாவின் இரண்டு மகன்களான ஹெச் டி குமாரசாமி, ஹெச்டி ரேவண்ணா உள்ளனர். ரேவண்ணா, பவானி தம்பதிகளின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் ஹாசன் தொகுதியின் எம்பியாக இருந்து வருகிறார். தற்போதும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் ஹாசன் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தேர்தல் முடிந்துவிட்டது. 

இதையடுத்து இவரது பாலியல் தொடர்பான 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேவ கவுடா அரசியலில் சேர்த்து வைத்து இருந்த ஒட்டுமொத்த பெயரையும் அடித்து துவசம் செய்துள்ளது. இந்த நிலையில்தான் பிரஜ்வல் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

இவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றாலும், பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து குமாரசாமி நீக்கியுள்ளார். பிரஜ்வல் தந்தை ரேவண்ணாவும் ஹோலேநரசிப்புரா தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறார்.   

பாலியல் வீடியோ:
வீடு தேடி உதவிக்கு வந்தவர்கள் மட்டுமின்றி, வீட்டுப் பணிப்பெண்ணையும் விடாமல் பாலியல் தொந்திரவு கொடுத்து இருக்கும் ரேவண்ணாவுக்கு தற்போது லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குள் எந்த விமான நிலையத்திற்குள் வந்தாலும் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்படுவார். கர்நாடகா அரசு சிறப்பு புலனாய்வு கமிட்டி விசாரணைக்கு உத்தவிட்ட நிலையில் தான் பிரஜ்வல் வெளிநாடு தப்பிச் சென்றார்.

பாஜக ஜேடிஎஸ் கூட்டணி:
கர்நாடகாவில் பாஜகவுடன், ஜேடிஎஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ஹாசன், மாண்டியா, கோலார் ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டுமே ஜேடிஎஸ் போட்டியிடுகிறது. மூன்றாம் கட்ட தேர்தலுக்கு கர்நாடாகா மாநிலம் தயாராகி வருகிறது. மூன்றாம் கட்டத்தில் மே 7 ஆம் தேதி நடக்கவிருக்கும் 94 தொகுதிகளுக்கான தேர்தலில் கர்நாடகாவில் மட்டும் 14 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இவை அனைத்திலும் பாஜக போட்டியிடுகிறது. 

ஜேடிஎஸ் தோல்வி:
கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜேடிஎஸ் கட்சிக்கு பெரிய அளவில் தோல்வி ஏற்பட்டது. கட்சியே எதிர்காலத்தில் இருக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. வெறும் 19 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே ஜேடிஎஸ் வெற்றி பெற்று இருந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த  மக்களவைக்கான தேர்தலிலும் ஜேடிஎஸ் கட்சிக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டு இருந்தது. ஹாசன் தொகுதியில் மட்டும் பிரஜ்வல் வெற்றி பெற்று இருந்தார். இந்த நிலையில் பாஜகவுடன் தற்போதைய தேர்தலில் ஜேடிஎஸ் கைகோர்த்து இருந்தது. 

பேரனுக்கு விட்டுக் கொடுத்த தேவகவுடா:
தனது சொந்த தொகுதியை பேரனுக்காக விட்டுக் கொடுத்தார் தேவ கவுடா. தனது காலத்திலேயே அழிக்க முடியாத கரையையும் பேரன் ஏற்படுத்தி விட்டார் என்ற வருத்தத்தில் தேவ கவுடா இருந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரஜ்வல் ரேவண்ணாவின் அந்தரங்க வீடியோவை வெளியிட்டது பிரஜ்வலின் முன்னாள் டிரைவர் மற்றும் பாஜக தலைவர் தேவராஜே கவுடா என்ற செய்தியும் வெளியாகி இருக்கிறது. 

தேவ கவுடா அரசியல் வாழ்க்கை:
விவசாய குடும்பத்தில் பிறந்து 1962 ஆம் ஆண்டு சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டார் தேவ கவுடா. கர்நாடகா அரசியலில் அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்த தேவகவுடா ஒரு கட்டத்தில் இந்திராகாந்தி கொண்டு வந்த எமர்ஜென்சியை எதிர்த்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் உருவாக்கிய ஜனதா கட்சியில் படிப்படியாக முன்னேறினார். 1980ல் ஜனதா கட்சி பிளவுபட்டது. இதையடுத்து ஒன்பது ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானார். பின்னர், ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் எழுந்த போபர்ஸ் ஊழல், ரபேல் ஊழல், எச்டி நீர் மூழ்கிக் கப்பல் ஊழல் ஆகியவற்றை எதிர்த்து காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார். 

பிரதமரானார் தேவ கவுடா:
அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய அமைச்சர்களில் ஒருவரான விபி சிங்குடன் சேர்ந்து ஜனதா தளம் கட்சியை துவக்கினார். 1966 தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டுமே ஆட்சி அமைப்பதற்கான பலத்தை பெறவில்லை. இந்த நேரத்தில் மாநிலத்தில் வலுவாக இருந்த கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி அமைத்து ஜனதா தளம் சார்பில் தேவ கவுடாவை பிரதமர் ஆக்கினர். இதற்குப் பின்னர் 1999ல் ஜனதா தளம் கட்சியை விபி சிங் முடக்கினார். அப்போது உருவானதுதான் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம். தற்போது வரை அந்தக் கட்சியின் தலைவராக இருக்கிறார் தேவ கவுடா. 

தேவ கவுடா குடும்ப அரசியல்:
தேவ கவுடாவுக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள். கர்நாடகா அரசியலில் தந்தைக்குப் பின்னர் தீவிர அரசியலில் இறங்கியவர் குமாரசாமி. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் இரண்டு முறை முதல்வராக இருந்துள்ளார். ரேவண்ணாவும் அமைச்சராக இருந்துள்ளார். ரேவண்ணாவின் மகன் எம்பி ஆனாலும், குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி 2019 மக்களவை மற்றும் 2023 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

நிகில் குமாரசாமி:
ரேவண்ணா ஒருவகையில் கட்சிக்கு குழி தோண்டினார் என்றால் நிகில் குமாரசாமி இதற்கு முன்னரே கட்சிக்கு குழி தோண்டினார் என்று கூறலாம். 2006ஆம் ஆண்டில் பெங்களூருவில் இருக்கும் ரெஸ்டாரண்டில் நடு இரவில் தனக்கு உணவு தரவில்லை என்று கூறி ரகளையில் ஈடுபட்டார். இது பெரிய அளவில் பேசப்பட்டது. அப்போது 19 வயதே ஆன நிகிலின் தந்தை குமாரசாமி மாநிலத்தின் முதல்வராக இருந்தார். 

பவானி ரேவண்ணா வைரல் வீடியோ:
சமீபத்தில், பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயார், பவானி ரேவண்ணாவும் செய்திகளில் அடிபட்டார். இவரது சொகுசு எஸ்யூவி கார் ஒரு பைக் மீது மோதியது. இதையடுத்து வைரலான வீடியோவில், ''நீங்கள் இறக்க விரும்பினால், நீங்கள் பஸ்சுக்கு அடியில் சென்றிருக்க வேண்டும், ஆனால் எனது காருக்கு கீழே அல்ல. சேதத்தை சரி செய்ய ரூ. 50 லட்சம் செலவாகும், தருவீர்களா?'' என்று கேட்டு இருந்தார். 

2023 சட்டமன்றத் தேர்தலில் ஜேடிஎஸ் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் முன்னரே தன்னை வேட்பாளராக அறிவித்துக் கொண்டார் பவானி ரேவண்ணா. இதன் பின்னர் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்து ஸ்வரூப் பிரகாஷுக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. இப்படி குடும்பத்தில் பல சிக்கல்கள் இருப்பதால் ஜேடிஎஸ் அழிவு தேவ கவுடா முன்பே நடக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

தேவ கவுடா குடும்பத்தில் நடந்த அரசியல் சறுக்கலில் முக்கியமானது நடிகை குட்டி ராதிகாவை ஹெச் டி குமாரசாமி திருமணம் செய்தது. நாட்கள் செல்ல செல்ல இதுவும் மறைக்கப்பட்டது. ஆனால், இன்று வேறு விதத்தில் சிக்கல் பூகம்பாக உருவெடுத்துள்ளது.  

click me!