அரசு கல்லூரிகளில் காலியாக கிடக்கும் ஆசிரியர் பணியிடங்கள்.! நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்.? ஓபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Jun 23, 2023, 2:37 PM IST

வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதாகக் கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அரசு காலிப் பணியிடங்களை முறையாக, நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்காதது சாத்தான் வேதம் ஓதுவது போல் அமைந்துள்ளதாக ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். 


கல்லூரியில் காலி பணியிடம்

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடம் நிரப்பாமல் இருப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உலக அரங்கில் தமிழ்நாடு வீறு பெற்று, தனிச் சிறப்புடன் விளங்க வேண்டுமெனில், உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி வளர்ச்சி பெறுதல் மிகவும் அவசியம். இந்த இரண்டும் வளர்ச்சி பெற வேண்டுமெனில் கல்லூரிகளில் தரமான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, நிரந்தரமான ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்.

Tap to resize

Latest Videos

ஆனால், இதற்கு முற்றிலும் முரணான நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 3.5 இலட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்த தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை முறையாக நிரப்ப எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக, பெரும்பாலான கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

தொகுப்பூதியத்தில் பணி நியமனம்

பெரும்பாலான கல்லூரிகளில் பொறுப்பு முதல்வர் தான் இருக்கிறார்கள். இந்த நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 5,699 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக மாதம் 20,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியமர்த்த தி.மு.க. அரசு ஆணை பிறப்பித்து இருப்பதைப் பார்க்கும்போது, நிரந்தரமாக கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்க இந்த அரசு முன்வராது என்பது தெள்ளத் தெளிவாகிறது. தி.மு.க. அரசின் இந்தச் செயல் எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதாகக் கூறும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அரசு காலிப் பணியிடங்களை முறையாக, நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்காதது சாத்தான் வேதம் ஓதுவது போல் அமைந்துள்ளது.

ஆசிரியர் தொழிலையே அவமதிப்பதற்கும் சமம்

பொதுவாகவே, பள்ளிகள், கல்லூரிகளுக்கு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது என்பது உயர் கல்வியைப் பாதிக்கும் செயலாகும். மேலும், முனைவர் பட்டம், முதுநிலைப் பட்டம் பெற்றவர்களை எல்லாம் வெறும் 20,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிப்பது என்பது ஆசிரியர் தொழிலையே அவமதிப்பதற்கும் சமம். தற்போது தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டாலும், ஒருசில ஆண்டுகள் கழித்து அவர்களை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகளையாவது அரசு வகுக்க வேண்டும்.அப்பொழுதுதான், கவுரவ விரிவுரையாளர்களும் ஆர்வமாக பணியாற்றுவார்கள்.

கல்லூரிகளில் நிரந்தரமாக பணி

இல்லையெனில், அவர்களுடைய ஆர்வம் குறைவதோடு, தனியார் கல்லூரிகளில் அதிக சம்பளத்தில் நிரந்தரப் பணி கிடைக்குமேயானால், அங்கு செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இதன் காரணமாக, அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படும். எனவே, அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் தரமான உயர் கல்வியைப் பெற்று அதன்மூலம் வேலைவாய்ப்பினை அடையும் வகையில், அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் பணியமர்த்தவும், கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகளை வகுக்கவும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும், தொகுப்பூதியத்தில் பணியமர்த்தும் முறையினை கைவிட வேண்டுமென ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஜூன் 23ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் மறக்க முடியாத நாள்? என்ன காரணம் தெரியுமா? பிளாஸ்பேக்

click me!