ஊதியம் தர பணமின்றி ஓய்வூதிய நிதியை செலவழிக்கும் சென்னைப் பல்கலைக்கழகம்..! தமிழக அரசே இதற்கு காரணம்-அன்புமணி

By Ajmal Khan  |  First Published Jun 23, 2023, 12:40 PM IST

 பல்கலைக்கழகத்தின் செலவுகளுக்கு தமிழக அரசு போதிய நிதி, மானியத்தை வழங்கத் தவறியது தான் நிதிநிலை  மோசமடைந்ததற்கு காரணம் என தெரிவித்துள்ள அன்புமணி,  அதற்கு தமிழக  அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் கூறியுள்ளார். 


சென்னைப் பல்கலைக்கழக நிதி நிலைமை

சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க பணம் இல்லாததால், ஓய்வூதிய நிதியம் மற்றும் அறக்கட்டளை நிதியை எடுத்து ஊதியம் வழங்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு காலத்தில் ரூ.500 கோடிக்கும் கூடுதலாக உபரி நிதி வைத்திருந்த சென்னை பல்கலைக்கழகம், இப்போது ஊதியத்திற்கு கூட நிதியின்றி தவிப்பதும், அதற்கு நிதியுதவி வழங்க தமிழக அரசு மறுப்பதும் கவலையளிப்பதாக கூறியுள்ளார். 

Latest Videos

undefined

ஊதியம் கொடுக்க முடியாமல் சிரமம்

மே மாத ஊதியத்திற்கும், பிற செலவுகளுக்கும் சென்னை பல்கலைக்கழகத்திற்கு ரூ.18.61 கோடி தேவைப்பட்ட நிலையில், பல்கலைக்கழகத்திடம் ரூ.5 கோடி மட்டுமே இருப்பில் இருந்தது. ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட தவிர்க்க முடியாத செலவுகளை செய்வதற்குக் கூட, குறைந்தபட்சம் ரூ.11.50 கோடி தேவைப்பட்டது. நிலைமையை சமாளிக்க ஒய்வூதிய நிதியம், அறக்கட்டளை நிதியம் ஆகியவற்றில் இருந்த ரூ.7.6 கோடியை பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்து பயன்படுத்தியுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு இதைத் தவிர வேறு வழியில்லை. சென்னை பல்கலைக்கழகத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்கு தமிழக அரசு தான் காரணமாகும். சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை சென்னைப் பல்கலைக்கழகத்திடம் ரூ.500 கோடி வரை உபரி நிதி இருந்தது. 

மாணவர்களுக்கு இலவச கல்வி

ஆனால், பல்கலைக்கழகத்தின் செலவுகளுக்கு தமிழக அரசு போதிய நிதி, மானியத்தை வழங்கத் தவறியது தான் நிதிநிலை  மோசமடைந்ததற்கு காரணம் ஆகும். அதற்கு தமிழக  அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்; இந்நிலையிலிருந்து பல்கலை. மீளவும் அரசு தான் உதவ வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்தில் 779 பேராசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊதியமும், 1463 ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்பட வேண்டியிருக்கிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.200 கோடி வரை பல்கலைக்கழகத்திற்கு செலவாகிறது. ஆனால், மாணவர்களுக்கு இலவசமாகவும்,  மிகக்குறைந்த கட்டணத்திலும் உயர்கல்வி வழங்கி வருவதால் பல்கலைக்கழகத்திற்கு போதிய வருவாய் கிடைப்பதில்லை. அதனால், பல்கலைக்கழகத்திற்கு பெரும் நிதிச்சுமையும், கடன்சுமையும் ஏற்படுகிறது.

கடுமையான நிதிப்பற்றாக்குறை

எடுத்துக்காட்டாக 2022-23ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் மொத்த செலவு ரூ.164 கோடி ஆகும். ஆனால், பல்கலைக்கழகத்தின் மொத்த வருமானமே ரூ.92 கோடி தான். மாநில அரசு  ரூ.63 கோடி மட்டுமே மானியம் வழங்கிய நிலையில், ரூ.8.50 கோடி பற்றாக்குறை ஏற்பட்டது. இப்படியாக கடந்த சில  ஆண்டுகளில்  பல்கலைக்கழகத்தின் நிதிப்பற்றாக்குறை ரூ.100 கோடியை தாண்டிவிட்டது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் சென்னை பல்கலைக்கழகம்  கல்வி வழங்குவதால், அதற்காக ஆகும் செலவை தமிழக அரசு தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  சென்னை பல்கலைக்கழகத்தில் நிலவும் கடுமையான நிதிப்பற்றாக்குறை காரணமாக பல்கலைக் கழகத்தில் பணியாற்றி கடந்த ஐந்தாண்டுகளில் ஓய்வு பெற்ற எவருக்கும் பணிக்கொடை உள்ளிட்ட  எந்த ஓய்வூதியப் பயன்களும் வழங்கப்படவில்லை. 

ஓய்வு பெற்றவர்கள் வாரத்திற்கு ஒரு போராட்டம்

அவற்றை வழங்கக்கோரி ஓய்வு பெற்றவர்கள் வாரத்திற்கு ஒரு போராட்டம் நடத்துவது வாடிக்கையாகி விட்டது. பல்கலைக்கழகத்தில் நிதி இல்லாததால் அவர்களின் கோரிக்கைகளை இன்று வரை நிறைவேற்ற முடியாத அவலம் நீடித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசால் நடத்தப்படும் ஐ.ஐ.டிகளுக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.500 கோடி வரை மத்திய அரசு வழங்குகிறது. நன்கொடைகள், காப்புரிமைகள் மூலம் ரூ.500 கோடி வரை கிடைக்கின்றன. ஆனால், சென்னை பல்கலைக்கழகத்திற்கும், தமிழகத்தின் பிற பல்கலைக் கழகங்களுக்கும் இதில் பத்தில் ஒரு பங்கு கூட கிடைப்பதில்லை. அதனால் தான் சென்னை பல்கலை. உள்ளிட்ட மாநில பல்கலைக்கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள்

 தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர், டிஜிபி யார்.? இறுதி கட்ட ரேசில் இருக்கும் பெயர்கள் என்ன.? வெளியான தகவல்

click me!