கேரள ‘லவ் ஜிகாத்’ வழக்கில் ‘நவம்பர் 27-ல் ஹாதியா ஆஜர்’ உச்ச நீதிமன்றம் உத்தரவு

First Published Oct 30, 2017, 7:22 PM IST
Highlights
Kerala love jihad Hadiya father says she is not under house arrest


கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் கேரள இளம் பெண்ணான அகிலா என்னும் ஹாதியா, நவம்பர் 27-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாக்டர் ஹாதியா

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் அகிலா. மருத்துவக் கல்வி முடித்த 24 வயதான பட்டதாரியான அவர் சாபின் ஜகான் என்பவரை கடந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் அகிலாவின் பெயர் ஹாதியா என்று மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெற்றோரின் அனுமதியை பெறாமல் கட்டாய மதமாற்றத்துக்கு ஹாதியா ஆளானதாக புகார்கள் எழுந்தன.

பரபரப்பு குற்றச்சாட்டு

இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ஹாதியாவின் தந்தை அசோகன், கேரள உயர் நீதிமன்றத்தை அணுகினார். அவர் தாக்கல் செய்த மனுவில், சில முஸ்லிம் அமைப்புகள் திட்டமிட்டு தனது மகளை மதமாற்றம் செய்து விட்டதாகவும், தனது மகளை தன்னிடம் மீட்டுத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கடந்த மே மாதத்தின்போது, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மதம் மாற்றி சிரியாவில் தீவிரவாத அமைப்புடன் தன் மகளை சேர்ப்பதற்காக சில முஸ்லிம் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன என்று குற்றம்சாட்டினார்.

உயர் நீதிமன்ற உத்தரவு

விசாரணையின்போது ‘அந்தத் திருமணம் வெறும் நாடகம், தனக்கு எது நல்லது என்று தீர்மானிக்கும் அளவுக்கு அவர் முதிர்ச்சி அடையவில்லை, பெற்றோருடன் இருப்பதுதான் அவருக்கு நல்லது’ என்று இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ஆணையிட்டது.

மேல் முறையீடு

இதனை எதிர்த்து, ஹாதியாவின் கணவர் சாபின் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கினை தேசிய புலனாய்வு அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதன் பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தாக்கல் செய்த அறிக்கையில், ஹாதியா விவகாரம் என்பது ‘லவ் ஜிகாத்’துடன் சம்பந்தப்பட்டது அல்ல என்றும், இருப்பினும் இதுபோன்று மதம் மாற்றி திருமணம் முடிக்கும் கலாசாரம் கேரளாவில் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தது.

கேள்வி

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது, எந்த அடிப்படையில் ஹதியாவின் திருமணம் செல்லாது என்று கேரள உயர் நீதிமன்றம் அறிவித்தது? என்றும், திருமணம் ஆன பின்னரும் ஹாதியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவரது தந்தைக்கு என்ன உரிமை உள்ளது? என்றும் கேள்வி எழுப்பியது.

ஹாதியாவின் விருப்பமே முக்கியம்

இந்நிலையில், ஹாதியாவிடம் விசாரணை மேற்கொள்ள இயலவில்லை என என்.ஐ.ஏ. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் ஹாதியாவின் விருப்பத்துக்குத்தான் நீதிமன்றம் முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே அவரை நவம்பர் 27-ம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

click me!