
திமுக மூத்த நிர்வாகிகள் சர்ச்சை பேச்சு
தமிழத்தில் திமுக கட்சிதான் ஆளும் கட்சியாக செயல்படுகிறது. முக ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடக்கிறது. (இதெல்லாம் தெரிந்த கதைதான் நீங்க என்ன சார் சொல்ல வர்றீங்க ?) என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. இதோ நேரடியாக விஷயத்துக்கு வருவோம். தமிழகத்தின் முதல்வராக வருவாரா மாட்டாரா என்ற பயங்கர எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றினார் முக.ஸ்டாலின். முதலமைச்சராக பதவி ஏற்க்கும் போது அவர் உச்சரித்த ’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் ‘ என்ற வார்த்தைகளுக்கு பின்னால் அவர் கடந்து வந்த பாதையில் அவர் அனுபவித்த வலிகளும் , ஏளனங்களும் அப்பட்டமாக உணரமுடிந்தது. அந்த வகையில் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் மறைவுக்குப் பின் கட்சியை அரும்பாடுபட்டு, கட்டிக்காத்து, வழி நடத்தி, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் என்றால் அது மிகையல்ல.
முதல்வரின் தூக்கத்தை கெடுத்த நிர்வாகிகள்
ஆனால் இதெல்லாம் தெரிந்தும் கட்சியின் மூத்த அமைச்சர்கள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக முதல்வர் முக.ஸ்டாலின் தூக்கத்தை கெடுத்த வண்ணமே செயல்பட்டார்கள் என்றால் அதுவும் மிகையல்ல. உதாரணமாக ஆ.ராசா தொடங்கி வைத்த மனுதர்மம் தொடர்பான பேச்சாகட்டும், அமைச்சர் பொன்முடி கூறிய ஓசி பேருந்தாகட்டும்.. இரண்டுமே அரசியல் களத்தில் மிகப்பெரிய விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. குறிப்பாக ஆ.ராசா இந்துக்கள் அனைவரும் விபச்சாரியின் மகன் என்று மனுதர்மத்தை மேற்கோள் காட்டி பேசிய பேச்சு, இந்துக்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆ.ராசாவுக்கு எதிராக காவல் நிலையங்களில் நிறைய புகார்கள் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொன்முடி ஓசி பேருந்து வார்த்தையை பேச்சு வழக்கில் கேஷுவலாக பேசியதாகக் கூறி வருத்தம் தெரிவித்தார். இருப்பினும் திமுகவைப் பொருத்தவரை இவர்களின் பேச்சுக்கள் சங்கடத்தையே ஏற்படுத்தியது.
‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்கிறார்களா பெண்கள்.. இதுதான் திராவிட மாடலா? கொந்தளிக்கும் டிடிவி தினகரன்!
சுப்புலெட்சுமி டூ கனிமொழி
இதற்கு அடுத்ததாக திமுக தலைவராக கருணாநிதி அவர்கள் இருந்த காலத்திலேயே திமுக கட்சியில் முக்கிய தலைவராக பார்க்கப்பட்டவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். கட்சியில் தான் வகித்து வந்த துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து திடீரென விலகினார் சுப்புலட்சுமி ஜெகதீசன். இது திமுக மட்டுமல்லாது மாற்றுக் கட்சியினர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. தான் விலகியதற்கான காரணமாக சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியது திமுக தலைமைத் தன்னை மதிக்கவில்லை என்பது தான். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே பொறுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை அமர்த்தினார் திமுக தலைவர் முக.ஸ்டாலின். இதற்கு அடுத்ததாக சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டுவரும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று சொந்த கட்சிக்குள்ளாகவே கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
திமுக துணை பொதுச்செயலாளர் ஆனார் கனிமொழி.. கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு..
நீண்ட நாள் திட்டம் நிறைவேறியது
காரணம் முதல்வரின் உடல் நிலை. எனவே ஸ்டாலினுக்குப் பின் கட்சியையும் ஆட்சியையும் சரியான முறையில் கொண்டு செல்ல உதயநிதி சரியாக இருப்பார் என்பதால் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் , அமைச்சர்களின் ஒப்புதலோடு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஒருவகையில் இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தினாலும் இப்போதைக்கு இந்த முடிவு சரிதான் என்றும் கூறப்பட்டு வருகிறது. அமைச்சர் உதயநிதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் துணைமுதல்வரே, நாளைய முதல்வரே என்ற பேனர்களை வைத்து உதயநிதி அவர்களுக்கு ’ஐஸ்’ வைக்கும் வேலையில் உடன்பிறப்புகள் இறங்கிவிட்டனர் .
இதெயெல்லாம் விட மிகப்பெரிய அட்ராசிட்டியாக உதய நிதி ஸ்டாலின் அவர்களின் மகன் இன்பநிதியையும் முதல்வராக்குவோம் என்று உடன்பிறப்புகள் இப்போதே சூலுரைக்கத் தொடங்கிவிட்டனர். இப்படியாக இந்த 2022 ஆம் ஆண்டில் ஆளும் கட்சியான திமுகவினர் அட்ராசிட்டி செய்து வந்தார்கள். இதேபோல வரும் 2023 ஆம் ஆண்டிலும் இந்த அட்ராசிட்டி அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.
ஓபிஎஸ்சுடன் 100 சதவீதம் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை... ஒரே போடாக போட்ட இபிஎஸ்..!
அதிமுகவும்- அதிகார மோதலும்
அதிமுக கட்சியைப் பொறுத்தவரை 2022 மிகவும் சோதனையான காலம் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத் தகராறு இந்த ஆண்டும் தொடர ஆரம்பித்து விட்டது. ஆட்சியில் இருக்கும் போது துணை முதல்வர் பதவியில் அமர்ந்து கொண்டு அமைதிகாத்த ஓ.பன்னீர் செல்வம். ஆட்சியை இழந்தபிறகு எடப்பாடி பழனிசாமியிடம் மீண்டும் மல்லுக்கட்டத் தொடங்கிருக்கிறார்.
கட்சியில் இரட்டத்தலைமை வேண்டும் என்று ஓ.பி.எஸ் போர்க்கொடி தூக்கினார். இரட்டைத் தலைமையெல்லாம் ஒத்துவராது ஒத்த தலைமைதான் கட்சிக்கு நல்லது என்று கூறி ஓபிஎஸ் அவர்களைக் கழட்டிவிட்டு அதிமுக கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக அமர்ந்தார் எடப்பாடி பழனிசாமி. இதெல்லாம் சுத்தமா நல்லா இல்லங்க நாங்க அப்பவே அப்படி என்ற ரீதியில் ஓபிஎஸ் அதிரடியாக அதிமுக அலுவலகத்தில் நுழைய அடிதடி , கலாட்டாவாகி கட்சி அலுவலத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
எதிர்கட்சி வேலையை கோட்டை விட்ட அதிமுக
கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்திய ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதராவாளர்களை கட்சியிலிருந்து நீக்குகிறேன் என்று ஈபிஎஸ் அறிக்கைக் கொடுக்க , நீ என்னய்யா என்ன நீக்குறது நான் உங்க எல்லாரையும் நீக்குறேன் என்று ஓபிஎஸ் ஒரு அறிக்கைக் கொடுத்தார். இப்படி மாறி மாறி இருவரும் அறிக்கை யுத்தம் நடத்துவதிலேயே கவனமாக இருப்பதால் எதிர்க்கட்சி வேலையை செய்வதை அதிமுக கோட்டை விட்டிருக்கிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கருத்துகள் கூறிவருகின்றனர்.
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை
இதில் ஹைலட்டாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மர்ம மரணம் தொடர்பான அறிக்கையை ஆறுமுக சாமி ஆனையம் தமிழக அரசிடம் சமர்பித்தது. அந்த அறிக்கையில் ஜெயலலிதா அவர்களைக் காப்பாற்றியிருக்கலாம். இதில் முதல் குற்றவாளி சசிகலாதான என்று குறிப்பிடப்பட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அப்படியெல்லாம் ஒன்னும் இல்லங்க அம்மாவை நான் கண்ணின் இமைபோல பார்த்துக்கிட்டேன். எந்த சட்ட நடவடிக்கை வந்தாலும் சந்திக்க நான் தயார் என்று கெத்தாக அறிக்கை விட்டார் வி.கே.சசிகலா. அதுமட்டுமா அதிமுக கட்சியை மீண்டும் ஓரணியில கொண்டு வந்து அம்மா கனவை நினைவாக்குவேன் என்று ஊர் ஊராக பிரச்சாரம் செய்து வருகிறார். வரப் போகின்ற 2023 ஆம் வரும் அதிமுக கட்சியினரின் கனவுகள் மெய்ப்படுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் இருந்து 25 எம்பிக்கள் உறுதி.. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? அண்ணாமலை ஆவேசம்
அதிமுகவை பின்னுக்கு தள்ளிய பாஜக
இந்த 2022 லேயே மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட, பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற, பேசப்படும் கட்சியாக தமிழக பாஜகதான் இருந்து வருகிறது. என்ன மூன்று காலத்துக்கும் சேர்த்து சொல்கிறோம் என்று நினைக்கிறீர்களா? காரணம் இருக்கு மக்களே ! அண்ணாமலை தமிழக பாஜக தலைமை பொறுப்பை ஏற்ற நாள்முதல் இன்று வரை தமிழக பாஜகவில் அதிரடியான பல சம்பவங்கள் நடந்தன.. நடந்து வருகின்றன. பாஜகவில் இருந்த மூத்த உறுப்பினர்கள் பலர் கட்ட்சியில் தற்போது இருக்கிறார்களா இல்லையா என்றே தெரியாத நிலை . பாஜகவின் தூண் என்று சொல்லப்பட்டுவந்த ஹெச்.ராஜா தற்போதெல்லாம் அடக்கி வாசிக்கிறார். பொன்னார் என்ன ஆனார். கேடி ராகவன் அரசியல் வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிட்டது. காயத்திரி ரகுராம் கட்சிக்கு குந்தகம் விளைவித்ததாக வெளியேற்றப்பட்டார்.
பாஜக நிர்வாகியின் சர்ச்சை ஆடியோ
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே நான் எல்லாத்தையுமே சமாளிப்பேன் சார் என்று அண்ணாமலை ஆல்ரவுண்ராக செயல்பட்டு வருகிறார். தன்னை நோக்கி வந்த தோட்டா ரஃபேல் கடிகாரமாக மாற அதுக்கல்லாம் நான் கவலைப்படுவனாங்க என்ற ரீதியில் பில்லு எரிஞ்சு போச்சுங்க என்று கூலாக பிரஸ் மீட் கொடுத்து வருகிறார். திருச்சி சூர்யா கட்சிக்குள் எதற்கு வந்தார் ஏன் வந்தார் என்ற கதையை விட ஏன் சென்றார் என்ற கதை கொஞ்சம் சுவாரசிமாக இருக்கும். ஒரு அதிகாலைப் பொழுதில் மருத்துவர் டெய்சியை அழகு செந்தமிழில் வசை பாட அந்த ஆடியோ அப்படியே பொதுவெளியில் லீக்காக இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்ற ரீதியில் உடனே கட்சியில் இருந்து விலகினார் சூர்யா. இதில் பலியானது பாவம் காயத்திரி ரகுராம் . தற்போது அவர் ஆன்மீகப் பயணங்களை செய்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.
ஹனிட்ராப்! ரகசிய ஆடியோ & வீடியோவுக்கு காரணம் அண்ணாமலை தான் - உண்மையை உடைத்த காயத்ரி ரகுராம்!
திமுகவை அலற விட்ட பாஜக
2022 ஆம் ஆண்டைப் பொருத்தவரை திமுகவுக்கு டஃப் கொடுப்பது அதிமுக அல்ல பாஜக மட்டுமே என்பதே நிதர்சனம். காரணம் திமுகவினரின் தூக்கத்தை அதிகளவில் அண்ணாமலையே கெடுத்து வருகிறார் என்பது கள எதார்த்தம். திமுகவினர் போடும் எல்லா பால்களையும் சுழன்று சுழன்று அடித்து வருவதால் இந்த ஆண்டின் பெஸ்ட் பொலிட்டிகள் லீடராக அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இதையும் படியுங்கள்