
பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு தமிழக பாஜகவின் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் அஞ்சலி செலுத்தப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- நம் பாரதத் திருநாட்டை இருளில் இருந்து, பேரொளிக்கு அழைத்துச் செல்லும் மாமனிதர், மக்கள் தொண்டிலேயே மனதை செலுத்திக் கொண்டிருக்கும் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீரா பென் அவர்கள் திடீர் மறைவு செய்தி பேரிழப்பாகும். ஹீராபென் என்றால் "வைர மங்கை". என்று பொருள். நம் தேசத்திற்கு ஒரு தன்னிகரில்லா, விலைமதிப்பற்ற வைரத்தைப் பெற்றுத் தந்திருக்கும் அந்த உத்தமத் தாயாரின், உயிர் பிரிந்த செய்தி நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எளிமையை, ஏழ்மையில் காட்டும் நேர்மையை, தன் பிள்ளைக்கு, வாழ்ந்து காட்டிய, அந்த அருமை அன்னை, தற்போது இறைவன் திருவடி நிழலை நோக்கிச் சென்று விட்டார். இந்த இழப்பைத் தாங்கும் வல்லமையை, நம் அன்புக்குரிய பிரதமர் மோடி அவர்களுக்கு இறைவன் அருளட்டும். ஊனாக்கி, உயிராக்கி, உணர்வாக்கி, அறிவாக்கி, ஆகச்சிறந்த ஆளுமை பண்புகளுக்கு எல்லாம் அடித்தளமிட்டு வளர்த்த, அன்னையைத் தவிர பெருந் தெய்வம் வேறேதுமில்லை என்று நம் ஆகமங்கள் கூறுகிறது.
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை..! அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்…! மாதா பிதா குரு தெய்வம்…! என்று அன்னையை… நாம் வழிபடும் தெய்வத்திற்கு இணையாக வலியுறுத்துவது, நம் பாரத பண்பாடு.
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு….
என்று தாயார் இறந்தவுடன் கதறி புலம்புகிறார்… பற்றெல்லாம் துறந்த பட்டினத்தடிகள்… என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம். “I say that there is nothing greater than the mother of a man”... Walt whitman என்ற அமெரிக்க கவிஞர் கூறியதை தன் அன்னையின் பாதங்களுக்கு எழுதிய கவிதைநூல் முகப்பில் பிரதமர் குறிப்பிடுகிறார்.
அன்னையின் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பால், ஏராளமான வேலை பணிகளின் பளு எதிர்வரினும் தாயாரை சென்று சந்தித்து அவர் ஆசி பெற்று வருவதை நம் பாரத பிரதமர் வழக்கமாகக் கொண்டிருந்தார். தன் அன்னையை சக்தியின் வடிவமாக கருதி அன்னையின் திருவடிகளுக்கு என்று அவர் எழுதியிருக்கும் கவிதை தொகுப்பு மிகப் பிரபலம்.
தாயே உன் ஆசியினால் எதுவும் சாத்தியமாகும்
உன் உயிரோட்டத்தை எனக்குள் உணரச் செய்தவளே…
பிளக்கும் இதயத்தின் வேதனை சாதாரணமானதல்ல
அவசியம் நீ எனக்கு ஏதோ ஒன்றை அறிவுறுத்துகிறாய்
ஆனால் தாயே ஒரு பாமர மனிதன்
சாதாரணமான எனக்கு உன் சமிக்கை புரியவில்லை
எதற்காக எனக்கு இந்த இதய வலி
இது எதிர்பார்க்கப்பட்டது என்றாலும்...
வலிகள்...., வலிகள் தானே
சரி தாயே நீ என்னை வருத்துவது என்று முடிவு செய்து விட்டாய்....
சகிப்புத்தன்மையை தாங்கும் சக்தியை எனக்கு பயிற்சி கொடுக்கிறாய்
தாயே உன் அருளை நான் நம்புகிறேன்
தாயே அதுவரை உன் கைகளில் என்னை ஒப்படைப்பதை விட என்னால் வேறு என்ன செய்ய முடியும்.... (”அன்னையின் திருவடிகளுக்கு” மோடியின் கவிதை - 24.12.1986)
தன் தாயாரின் திருவடிகளுக்கு பூசைகள் செய்து, நமக்கெல்லாம் வழிகாட்டியாக வாழ்ந்து காட்டியவர், நரேந்திரமோடி அவர்கள். தன் மகன் நாட்டின் தலைவனாக வாழும்போது, தன் வயது முதிர்ந்த காலத்திலும், மகனின் அரசு இல்லத்திற்கு செல்ல உரிமை இருந்தும் செல்ல விரும்பாமல் தன் அன்பு இல்லத்தில் எளிமையின் இலக்கணமாக வாழ்ந்து வந்த இந்த வரலாற்றுத் தாயை வணங்குகிறேன். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொறுப்பாளர் சி.டி,ரவி அவர்கள் சார்பிலும், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அவர்கள் சார்பிலும், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர்கள், பாஜகவின் மூத்த தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், அணி பிரிவு தலைவர்கள், அனைத்து உறுப்பினர்கள், மற்றும் தமிழக மக்களின் சார்பில் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நம் பாரதப் பிரதமரின் அன்புத்தாயாரின் மறைவையொட்டி, பாரதிய ஜனதா கட்சியின் சென்னை தலைமை அலுவலகம் கமலாலயத்திலும், ஒவ்வொரு மாவட்ட தலைமை அலுவலகத்திலும், அன்னை ஹீராபென் அவர்களின் திருஉருவப்படம் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அனைத்து மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோரின் பங்களிப்புடன் இன்று மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 வரை இம் மலரஞ்சலி நிகழ்ச்சி, அனைத்து மாவட்ட அலுவலகத்திலும் மற்றும் தலைநகர் பாஜக அலுவலகங்களில் நடைபெறுகிறது. அன்னையை ஒரு ஆன்ம தத்துவமாக வழிபட்ட, நம் பிரதமருக்கு காலம் ஆறுதல் கூறட்டும்... மறைந்த அன்னை ஹீராபென் அவர்களின் ஆன்மா இறை நிழலில் அமைதியாக இளைப்பாறட்டும்... தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலை பணிவான வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.