குஜராத்தில் தேய்ந்து வரும் பாஜக... இவ்வளவு கஷ்டப்பட்டும் மோடி இஷ்டப்பட்டது நடக்கலையே..! 

Asianet News Tamil  
Published : Dec 18, 2017, 07:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
குஜராத்தில் தேய்ந்து வரும் பாஜக... இவ்வளவு கஷ்டப்பட்டும் மோடி இஷ்டப்பட்டது நடக்கலையே..! 

சுருக்கம்

gujarat victory is not as much expected bu party why

ஊழல்களால் திளைத்த மத்திய காங்கிரஸ் அரசு 2014ஆம் ஆண்டு சந்தித்த படுதோல்விக்குப் பின்னர், நடக்கும் ஒவ்வொரு தேர்தல்களிலும் பின்னடைவைச் சந்தித்தே வந்திருக்கிறது. பஞ்சாப்பில் விதிவிலக்காக வெற்றி பெற்றாலும், மற்ற இடங்களில் பெரும்பாலும் தோல்வியை சந்தித்தே வந்திருக்கிறது. 

மாறாக, 2014ல் நரேந்திர மோடி பிரதமராக ஆட்சிக்கு வந்த பின்னர், ஒவ்வொரு தேர்தல்களிலும் பாஜக., வெற்றி பெற்றே வந்திருக்கிறது. மாநிலங்களில் அதிகம் இடங்களைப் பெற்று,  நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதிக உறுப்பினர்களைப் பெற வேண்டும் என்பதே பாஜக.,வின் முதன்மை இலக்காக அப்போது இருந்தது. அதனை மையமாக வைத்தே, காய் நகர்த்தியது பாஜக. 

அந்த இலக்கை வைத்து இயங்கித்தான், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்களில் பாஜக., நபர்கள் வெற்றி பெற முடிந்தது. இன்னும், இந்தியாவில் இருந்தே காங்கிரஸை அகற்ற வேண்டும் என்ற இலக்குடன் களம் இறங்கி, அதை சாத்தியப் படுத்தி வருகிறது. இதற்கு, மோடியின் தனிநபர் செல்வாக்கும், அமித் ஷாவின் யோசனைகளும் காரணம் என்று கூறப்பட்டாலும், மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படும் எதிர்மறை பிரசாரம் கூட காரணம் என்று சொல்லலாம். மோடிக்கு எதிராகவும், பாஜக., அரசுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படும் எதிர்மறை பிரசாரங்கள் அக்கட்சிக்கு சாதகமாக முடிவதையே இவை காட்டுகின்றன. 

குஜராத்தில் மோசமான காலகட்டத்தில் மோடி ஆட்சிக்கு வந்தார். அது, 1995ம் ஆண்டு. ஒன்பதாவது சட்டசபையில், அப்போது கேசுபாய் படேல் தலைமையில் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது பாஜக. அப்போது பாஜக., பெற்ற இடங்கள் 121. காங்கிரஸ் 45 இடங்களைப் பெற்றது.  அதற்கு முன் கூட்டணி ஆட்சியில் இருந்த ஜனதா தளம் பின்னர் காணாமல் போனது. இருப்பினும், தொடர்ந்து முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளும், நிர்வாக அனுபவமின்மையும் கேசுபாய் படேலுக்கு எதிராகப் போனது. தொடர்ந்து முதல்வர்கள் மாறினர். சங்கர் சிங் வகேலா வந்தார். 
தொடர்ந்து 1998ல் பத்தாவது சட்டசபையில் பாஜக., மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 117 இடங்களில் வென்று ஆட்சி அமைத்த பாஜக.,வுக்கு இப்போதும்  கேசுபாய் படேல் முதல்வராக இருந்தார். ஆனால் அப்போது நிகழ்ந்த பூஜ் நிலநடுக்கம், தொடர்ந்து பாஜக., முதல்வர் சரியாக விரைவாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளால், மோசமான நிலையில்  இருந்த போது, மோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். 

அதன் பின்னர், 2002ல் நடந்த தேர்தலில் அதிகபட்சமாக 127 தொகுதிகளைப் பெற்றது பாஜக., காங்கிரஸ் 51 தொகுதிகளைப் பெற்றது. 

ஆனால், அப்போதுதான் குஜராத்தில், கோத்ராவில் ராம சேவகர்களை ரயிலில் வைத்து எரித்ததால் ஏற்பட்ட பிரச்னையில், தொடர்ந்து கலவரம் நிகழ்ந்தது.  இது அப்போது நரேந்திர மோடியை கொடூரமான நபராக ஊடகங்களாலும் எதிர்க்கட்சியினராலும் சித்திரிக்க வைத்தது. எனவே மீண்டும் பாஜக., வெற்றி பெறாது என்று பிரசாரம் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து வந்த 2007  தேர்தலில் மோடி தனித்துவமாய் நின்று வென்று காட்டினார். அப்போது முந்தைய தேர்தலைக் காட்டிலும் 10 இடங்கள் குறைவாகவே பெற்றது பாஜக.,  117 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தாலும், முந்தைய தேர்தலைப் போல் அதிக இடங்களைப் பெற இயலவில்லை. 

தொடர்ந்து 2012 தேர்தலில், 13 வது சட்டசபையிலும் பாஜக.,வே வென்றது. அப்போதும் மோடியின் விளைவு வேலை செய்தது. எதிர்பாளர்களை அடக்கி தனி ஒருவனாய் வளர்ச்சியின் அடையாளமாய் குஜராத்தை மாற்றுவதாக மக்கள் வாக்களித்தனர். அப்போது பெரிய மாறுதல் எதுவும் இல்லாமல், 116 இடங்களில் வென்றது பாஜக., காங்கிரஸ் 60 இடங்களில் வென்றது. 

இதன் பின்னர், இப்போது  ஆறாவது முறையாக பாஜக., வென்றுள்ளது. ஆனாலும், இடங்கள் என்னவோ குறைவுதான். 150 ஐ இலக்காகக் கொண்டு இறங்கி, 100 இடங்களைக் கூடப் பெற இயலாமல் போய், 99 உடன் நின்று விட்டது பாஜக., ஆனால் காங்கிரஸோ, 60ல் இருந்து 79 இடங்கள் என 19 இடங்களை அதிகம் பெற்று வளர்ச்சியைக் காட்டி விட்டது. 

இது பாஜக., குஜராத்தில் தேய்ந்து வருவதைக் காட்டுகிறது. காரணம், 1995 கால கட்டத்தில் இருந்த மாநிலமும் மக்களும்  இப்போது இல்லை. பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்த மாநிலத்தில், வறுமையும் வேலை வாய்ப்பின்மையும் பயங்கரவாத நடவடிக்கைகளும் மிக அதிகம். பாலை வனப் பகுதி நிறைந்த இடத்தில் தண்ணீருக்குத் தவித்த நிலையில், மின்சாரம் கிடைக்காத கிராமங்களைக் கொண்ட தொகுப்பாகத் திகழ்ந்த குஜராத்தில் மோடியின் அயராத உழைப்பும், தன்னலமற்ற திட்டமிடல்களும் பெரும் சாதனைகளாகத் திகழ்ந்தன. அன்றைய கால கட்டத்தில் குஜராத்தைக் கண்டவர்கள், பின்னாளில் வந்த வளர்ச்சியை, நீர் மேலாண்மையை, செக் டேம்கள் எனும் சிறு தடுப்பணைகளை, மின்சாரத் தன்னிறைவை என பலவற்றையும் பார்த்து, மோடிக்கு தங்கள் ஆதரவை அளித்து வந்தார்கள். 

இப்போது 20 வருடங்கள் கடந்து விட்டன. புதிய தலைமுறை வாக்காளர்கள் முளைத்துவிட்டார்கள். அவர்களுக்கு 20 வருடங்களுக்கு முந்தைய குஜராத்தின் நிலமை தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் தற்போதையை உணர்ச்சி மிகு அரசியல்தான். அதனால்தான் ஹர்த்திக் படேலும், சாதிய அரசியல்களும் இளைய சமுதாயத்தை தூண்டிவிடும் அம்சங்களாகத் திகழ்கின்றன. 

இந்தக் காரணங்களா, அடுத்த தலைமுறை வாக்காளர்களின் ஆதரவு இன்றி குஜராத்தில் எப்படி வெற்றி சாத்தியம் என்ற நிலையில், ஓரளவு வெற்றியைக் குவித்திருக்கிறது பாஜக., என்றாலும், பழைய வெற்றி சூத்திரத்தை இப்போது இழந்து வருகிறதோ என்றுதான் தோன்றுகிறது. 

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!