எங்களிடம் எம்.பி.கள் இருந்திருந்தால்! நிதியை குடுத்துட்டு தமிழ்நாட்டுக்குள்ள வாங்கனு சொல்லிருப்போம் - அதிமுக

By Velmurugan s  |  First Published Mar 4, 2024, 7:04 PM IST

எங்களிடம் மட்டும் 38 எம்.பி.கள் இருந்திருந்தால் நிவாரண நிதியை கொடுத்துவிட்டு தமிழ் நாட்டிற்குள் வாருங்கள் என்று சொல்லியிருப்போம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் நிலவும் போதைப் பொருட்கள் பயன்பாட்டை திமுக தலைமையிலான தமிழக அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி மதுரை பெத்தானியாபுரத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, எம்.எல்.ஏ க்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான் என்ற செல்வம் உள்பட 500 க்கும் மேற்ப்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர். 

சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசுகையில் "போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக்கை திமுக அரசு பாதுகாத்து வருகிறது. தமிழகத்தில் இருந்து போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்றால் திமுகவை ஒழிக்க வேண்டும். போதைப்பொருள் குற்றவாளியை பாதுகாக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முதல் குற்றவாளி. மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட கட்டண உயர்வுகளில் இருந்து மக்களை பாதுகாத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக மக்கள் எடப்பாடி பழனிச்சாமியை தந்தையாக, சகோதரனாக பார்க்கிறார்கள்" என பேசினார்.

Latest Videos

undefined

தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட 38 எம்.பி.களால் எந்த பயனும் இல்லை - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில் "தமிழக மக்களின் நலனுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே. போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு வாய்ப்பூட்டு போட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து உலக அளவில் போதைப்பொருள் கடத்தல் நடைபெற்று தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது, எடப்பாடி பழனிச்சாமி கூறிய அறிவுரைகளை முதலமைச்சர் ஏற்று கொண்டு இருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது, 

திமுகவின் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேரிடர் நிதியை வழங்க வலியுறுத்தி ராஜினாமா செய்திருக்க வேண்டாமா? அதிமுக சார்பில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருந்தால் ராஜினாமா செய்திருப்போம், பேரிடர் நிதியை கொடுத்த பிறகு தமிழகத்திற்கு வாருங்கள் என பிரதமரிடம் கூறியிருப்போம். காவிரி விவகாரத்தில் திமுக அரசு தோல்வி அடைந்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு மத்திய அரசுக்கு நிதி வழங்க விருப்பமில்லை, மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற திமுக அரசுக்கு தகுதி இல்லை" என பேசினார். 

திருப்பூரில் நலத்திட்ட பொருட்களுக்காக மேடையை போர்க்களமாக்கிய இளைஞர்கள்; அதிமுக கூட்டத்தில் கும்மாங்குத்து

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசுகையில் "தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்க வேண்டும் என்றால் நாடாளுமன்ற தேர்தலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். போதைப் பொருள் கடத்தலில் உலகத்திற்கே வழிகாட்டியாக திமுக திகழ்கிறது. ஆங்கில படங்களில் சொல்வது போதை பொருள் கடத்தலில் போல கிங் ஆப் கிங்காக ஜாபர் சாதிக் விளங்கி இருக்கிறார். ஜாபர் சாதிக் திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு தான் 4 நிறுவனங்களை தொடங்கி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். ஜாபர் சாதிக் திமுகவுடன் மிக நெருக்கமாக இருந்ததால் காவல்துறையினர் அவரை நெருங்க முடியவில்லை. 

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் யாரும் பிடிக்க முடியாத சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டு பிடித்தது தமிழ்நாடு காவல்துறை. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜாபர் சாதிக் உடன் தமிழக டிஜிபி தொடர்பில் இருக்கிறார். திமுகவிடம் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் கட்சிகளை அடமானம் வைத்து விட்டது. திமுகவின் கூட்டணி கட்சிகள் செந்தில் பாலாஜி கைதுக்காக மட்டுமே ஆர்ப்பாட்டம் செய்தன. திமுக உடன் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகளுக்கு ரோஷம், மானம், வெட்கம் இல்லை. திமுக ஆட்சி என்றைக்கு வீட்டுக்கு செல்கிறதோ அன்றைக்குத் தான் தமிழக மக்களுக்கு விடிவுகாலம். 

5 ஆண்டுகளில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக மக்களுக்காக ஏதும் செய்யவில்லை. 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் குளுகுளு ஏசியில் அமர்ந்து விட்டு படிக்காசை வாங்கி கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள சமூக விரோதிகள் அனைவரும் திமுகவில் அங்கம் வகிக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் 2026க்கு முன்னரே திமுக ஆட்சி கலைக்கப்படும்" என பேசினார்.

click me!