தேர்தலுக்காக தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து முகத்தைக் காட்டுகிறவர்கள் நாங்கள் இல்லை. அப்படி வருகிறவர்கள் யாரென்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்று அவசியமில்ல. உங்களுக்கே தெரியும் என பிரதமர் மோடியை விமர்சித்து ஸ்டாலின் பேசியுள்ளார்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் ஒரு 'டெல்டாகாரன்'
மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இதனை தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர், மக்கள் பயன் அடையக்கூடிய வகையில் பார்த்துப் பார்த்து திட்டங்களை உருவாக்கிக்கொண்டு வருகிறோம்.
undefined
அதுவும் எந்த சூழ்நிலையில்? நிதி நெருக்கடி அதிகமாக இருக்கின்ற சூழ்நிலையிலும், எந்த மக்கள்நலப் பணிகளையும், திட்டங்களையும் நாம் நிறுத்தவில்லை. ஏனென்றால், மக்கள் தொண்டு ஒன்றுதான் நம்முடைய ஆட்சியின் நோக்கம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தாலும், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் ஒரு 'டெல்டாகாரன்' என்ற உணர்வுடன் இந்த விழாவில் நான் திட்டப்பணிகளை தொடங்கி வைத்திருக்கிறேன்.
வரிப்பணமும், ஒட்டும் மட்டும் போதும்
நாங்க தேர்தலுக்காக தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து முகத்தைக் காட்டுகிறவர்கள் நாங்கள் இல்லை. அப்படி வருகிறவர்கள் யாரென்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்று அவசியமில்ல. உங்களுக்கே தெரியும். இப்போது, தேர்தல் தேதி அறிவிக்கப் போகிறார்கள். அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கி இருக்கிறார் நம்முடைய பாரதப் பிரதமர் அவர்கள். வரட்டும். அதை வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை.
தமிழ்நாட்டுக்கு நன்மை செய்துவிட்டு, நாம் வைக்கின்ற மிக மிக நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொண்டு வரட்டும். அப்படி இல்லாமல், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணமும், ஒட்டும் மட்டும் போதும் என்று வருகிறார்கள்! நாம் கேட்பது என்ன? சமீபத்தில், இரண்டு மிகப்பெரிய இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டோம். அப்போது ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய 37 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்டோம்.
ஒரு சல்லிகாசு கூட இன்னும் கொடுக்கவில்லை
அதை கொடுத்துவிட்டு தமிழ்நாட்டுக்குப் பிரதமர் வந்தாரா? இல்லை! ஒரு ரூபாய் கூட, ஒரு சல்லிகாசு கூட இன்னும் கொடுக்கவில்லை! தமிழ்நாட்டு மக்களுக்கு நிதி உதவி செய்ய மாட்டார்களாம். ஆனால், தங்களுடைய பதவி நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கு மட்டும் ஆதரவு கேட்டு வருகிறார்களாம். தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் இவர்களை பார்த்து நிச்சயம் ஏமாற மாட்டார்கள் என்று அழுத்தந்திருத்தமாக நான் சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாட்டு உரிமைகளுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் நமது திராவிட மாடல் அரசின் பக்கம்தான் தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் உறுதுணையாக நிற்பார்கள்! நிற்பார்கள்! நிற்பார்கள்! என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பு!