தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் வருகிற 1ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தீவிரம்
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் அதிமுக- பாஜக இடையிலான கூட்டணி முறிந்துள்ள நிலையில், புதிய அணிகளை உருவாக்க இரண்டு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டையும் ஏற்கனவே தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பணிகள் குறித்தும், வாக்குச்சாவடி முகவர்கள், கள நிலவரம் தொடர்பாக ஆலோசிக்க திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட "தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் " 01-10-2023 (ஞாயிற்றுக்கிழமை), காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
கர்நாடகா செய்வது நியாயமல்ல: துரைமுருகன்!