ஊழல் குற்றச்சாட்டில் ஜெயலலிதா சிறைக்கு சென்றார் என அண்ணாமலை கூறியது குற்றச்சாட்டு அல்ல, 'It is a fact' என பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்த கருத்திற்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக- பாஜக மோதல்
தமிழகத்தில் அதிமுக- பாஜக இடையிலான கூட்டணி கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வந்தது. இந்தநிலையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதாவை விமர்சித்து கருத்து தெரிவித்ததாக கூறி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் காரணமாக இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலால் அதிமுக- பாஜக இடையிலான கூட்டணி முறிந்தது. இந்தநிலையில் இது தொடர்பாக ஓபிஎஸ் அணியின் நிர்வாகி பண்ருட்டி ராமசந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஜெயலலிதா பற்றி ஊழல் குற்றச்சாட்டை அண்ணாமலை சுமத்தினாரே என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர்,
அண்ணாமலை சொன்னது உண்மை
"அது உண்மை. அவர் முதலமைச்சராக இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார்கள் என்பது உண்மை. அது பிடிக்கிறதா? பிடிக்கவில்லையா? என்பது வேறு. கடவுளையே குறை சொல்லும் நாடு. அவர் ஊழல் குற்றவாளி என்பதை நீங்கள் ஏற்கவில்லை, நாங்கள் ஏற்கவில்லை என்பது இல்லை. ஆனால், அது உண்மை. அந்த தீர்பை நாங்கள் ஏற்கவில்லை. அந்த தீர்ப்பு சரியாக வரவில்லை என்பது என் கருத்து என குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், `ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரை மாற்றச் சொல்வதற்கு எடப்பாடி தரப்புக்கு என்ன அருகதை இருக்கிறது... `எடப்பாடி பழனிசாமியை மாற்றுங்கள்’ என பா.ஜ.க கூறினால், அ.தி.மு.க-வினர் ஏற்றுக்கொள்வார்களா?" என ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பினார்.
பத்து கட்சி பண்ருட்டி
இந்த நிலையில் இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், பத்துக்கட்சி பண்ருட்டி அம்மா குறித்து அண்ணாமலை பேசிய கருத்தை 'It is a fact' என சொல்கிறார். அடுத்தவர் பேச அமைதி காத்தார். அருகில் இருப்பவரை பேசவும் அனுமதிக்கிறார் இந்த நடிப்பின் நாயகன். தாயை பழிப்பதை மகிழ்வோடு தாலாட்டு கேட்பதை போல கேட்கும் சுயநலவாதி பன்னீர்செல்வம் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்
பாஜக உறவை முடித்துக் கொண்ட அதிமுக: தமிழ்நாட்டில் கூட்டணி கணக்கு என்னவாக இருக்கும்?