மத்திய அரசு திட்டங்கள் மாநிலத்தில் கிடைக்கவில்லை.. ஏன்? கொந்தளித்த பாஜக தலைவர் அண்ணாமலை

By Raghupati RFirst Published Nov 14, 2022, 10:32 PM IST
Highlights

மத்திய அரசு கொண்டுவரும் நல்ல பல திட்டங்கள், நம் மாநிலத்தில் சரிவர கிடைக்கவில்லை என்று பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது என்று குற்றஞ்சாட்டி உள்ளார் அண்ணாமலை.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மக்கள் நலம் காப்பதற்காக மத்திய அரசு கொண்டுவரும் நல்ல பல திட்டங்கள், நம் மாநிலத்தில் சரிவர கிடைக்கவில்லை என்று பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

அண்ணாமலை:

அதன் அடிப்படையில் கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், அணி, பிரிவு, தலைவர்கள் ஆகியோர் நேற்று முதல், தமிழகம் முழுவதிலும் உள்ள பட்டியல் இன சகோதரர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று, சந்தித்து பேசினர். அப்போது, அவர்களின், குறைகளைக் கேட்டறிந்து, அந்த ஊரில் அமைந்துள்ள பொதுவெளியில், சமுதாய கூடத்தில் அல்லது கோவில் மண்டபம் போன்ற இடங்களில் அனைத்து மக்களையும் சந்தித்து, கலந்து பேசி அவர்களின் குறைகளை கேட்டுத் தெரிந்து கொண்டு, அதற்கான தீர்வுகளை முறைப்படி ஏற்படுத்தித் தரும் பணியில் நேற்று அனைவரும் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க..2 கோடிக்கு கிராமம் விற்பனை.! நல்ல ஆஃபர் யார் வேணாலும் வாங்கலாம் !! இவ்வளவு வசதிகள் இருக்கா ?

குறிப்பாக, பட்டியலினச் சகோதர சகோதரிகள் தங்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று தெரிவித்ததால், கடந்த நவம்பர் 9ஆம் தேதி நான்,  மதுரை மாவட்டத்தில், வாடிப்பட்டி தாலுகா, சாணாம்பட்டியில், உற்சாகமான கிராம மக்களிடம், உரையாடினேன். பாசம் காட்டிய பட்டியல் இனச் சகோதரரின் இல்லத்தில் மதிய உணவு அருந்தி, ஆலய மண்டபத்தில் அமர்ந்து, அன்பார்ந்த கிராம மக்கள் மத்தியிலே அளவளாவியது ஆனந்தமான நிகழ்வு.

தமிழக பாஜக:

மாண்புமிகு மத்திய இணை அமைச்சர்.திரு.எல்.முருகன் அவர்கள் நேற்று வடபழனியில் வசிக்கும் பழக்கடை எஸ்மணிகண்டன் அவர்கள் இல்லம் சென்று உணவருந்தி உரையாடினார். இதுபோல அனைத்து நிர்வாகிகளும் அந்தந்த பகுதியில் பங்கு பெற்ற நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்படி நம் சகோதரர்கள் வீட்டிற்கு செல்லும் பாஜக நிர்வாகிகள் முதலில் அனைவரையும் ஒன்று திரட்டி அவர்களுக்கு உள்ள குறைகளை கேட்டறிந்தனர். பிறகு அவர்களுக்கு மத்திய அரசு நலத்திட்டங்கள் எல்லாம் முறையாக கிடைக்கிறதா என்று கேட்டறிந்தனர்.

இதையும் படிங்க..பால் விலை உயர்வு - தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு !

இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பு கிடைத்தது.  ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லும் நமது நிர்வாகிகளை அவர்கள் எதிர்கொண்டு அழைத்து அன்பு பாராட்டி உரையாடி உணவு படைத்து, உற்சாகம் காட்டினர். எந்தச் சகோதரர் வீட்டில் உணவு அருந்தினோமோ! அவரை ஒரு நாள் நமது இல்லத்திற்கும் வருமாறு நம் நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். நானும் சாணாம்பட்டி திரு ஈஸ்வரன் அவர்களை என் இல்லத்திற்கு உணவருந்த அழைத்து இருக்கிறேன். இந்த அன்பு பரிமாற்றம், பரஸ்பரம் மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்குகிறது.

தமிழ்நாடு மக்கள்:

செல்லும் இடங்களில் எல்லாம் பலருக்கும் மத்திய அரசின் திட்டங்களை பெறுவதற்கான தகுதி இருந்தும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேரவில்லை என்ற கசப்பான உண்மை நமக்கு புரிந்தது. ஆகவே ஏறத்தாழ சுமார் 8000 கிராமங்களில் நமது நிர்வாகிகள் பட்டியல் இனச் சகோதர, சகோதரிகளைச் சந்திக்கும் பணியைச் செய்துள்ளனர்.

தமிழக மக்களுக்கு மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, நன்மைகளை, மத்திய அரசுத் திட்டங்களை மக்களின் உரிமையை அவர்களுக்கு வழங்கும் அதே வேளையில், விழிப்புணர்வூட்டும் நிகழ்வாக வரும் நவம்பர் மாதம் 25ஆம் தேதி சிதம்பரத்தில் இந்திய அரசியல் அமைப்பு தினம் பாஜக சார்பில் கொண்டாடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

click me!