ரவுசு காட்டிய ராஜேந்திர பாலாஜியை ரவுண்ட் கட்டும் வழக்குகள்.. கைது பீதியில் ஜாமீன் கோரி மனு..!

By vinoth kumarFirst Published Nov 18, 2021, 10:20 AM IST
Highlights

திடீர் திருப்பமாக ஆவின் நிறுவனத்தில் பலருக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி தன்னிடம் இருந்து ரூபாய் 3 கோடி வரை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விஜய நல்லதம்பி புகார் அளித்தார்.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இது தொடர்பாக ராஜேந்திர பாலாஜி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் விருதுநகர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் அதிமுக ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி என்பவரும் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக தன்னிடம் 30 லட்ச ரூபாய் பெற்றதாகவும் இருப்பினும் வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாகவும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க;- கரும்பை சேர்த்துடீங்க.. விடியா திமுக அரசே பணம் எங்கே? ஸ்டாலினை ரவுண்ட் கட்டும் எடப்பாடியார்..!

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியின் நண்பரும் அதிமுக வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளருமான விஜய நல்லதம்பியிடம் கடந்த செப்டம்பர் 25ம் தேதி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காவல் கண்காணிப்பாளர் முன் ஆஜரான விஜய நல்லதம்பி பணத்தைத் திருப்பி அளித்துவிடுவதாக உறுதி அளித்திருந்தார். இதனிடையே திடீர் திருப்பமாக ஆவின் நிறுவனத்தில் பலருக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி தன்னிடம் இருந்து ரூபாய் 3 கோடி வரை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விஜய நல்லதம்பி புகார் அளித்தார்.

இதையும் படிங்க;- Jai Bhim: நானும் வன்னியர் தான்... ஆனா என் சப்போர்ட் சூர்யாவுக்கே - வைரலாகும் பிரபலத்தின் வீடியோ..

இந்த புகார்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான புகார் அளிக்கப்பட்ட உடனேயே முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், பணத்தை இழந்தவர்கள் விஜய நல்லதம்பியிடமே பணத்தைக் கொடுத்தாக கூறியுள்ளனர். ஆனால் எனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புகார் அளித்தவர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, இந்த வழக்கில் என்னைக் கைது செய்ய வாய்ப்புள்ளதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 

ஏற்கனவே சொந்த கட்சியினரே  ராஜேந்திர பாலாஜி எதிராக புகார் அளித்த ஜாமீன் மனுவும் நிலுவையில் இருந்து வருகிறது. அதேபோல், ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில்  உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

click me!