வன்முறையை தூண்டாதே.. முதல்வரை சந்தித்தவுடன் அன்புமணிக்கு அட்வைஸ்.. தெறிக்கவிட்ட திருமா.

By Ezhilarasan BabuFirst Published Nov 18, 2021, 9:39 AM IST
Highlights

நடிகர் சூர்யா உள்நோக்கம் ஏதும்  இல்லை என்று அறிவித்த பிறகும், அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்கிய பிறகும் தொடர்ந்து பாமகவினர் அவருக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். 

பாமக தலைமை தங்களது கட்சி தொண்டர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றும், எந்த சமூகத்திற்காக தங்கள் போராடுகிறோம் என்று சொல்கிறார்களோ அதே சமூக இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் தலைமை நடந்துகொள்கிறது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தொடர்ந்து பாமகவினர் அவருக்கு மிரட்டல் விடுத்து வரும் நிலையில் திருமாவளவன் இவ்வாறு கூறியுள்ளார். 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம், இது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல சர்வதேச திரைப்படங்களை பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு நாடு கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இத்திரைப்படத்தில் தங்கள் சமூகத்தை இழிவு படுத்தி விட்டதாகவும், அதற்கு நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாமகவினர் போராட்டம் நடத்தி வருவதுடன், சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் பரிசு தருவோம் என வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகின்றனர். சூர்யாவுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி குரல் கொடுத்து வருகிறது. இயக்குனர் பாரதிராஜா நடிகர் சத்யராஜ் போன்றோர் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். ஆனால் நடிகர் சந்தானம் பாமகவுக்கு ஆதரவாகப் பேசி உள்ளார். தற்போது சூர்யா விவாகரம்  தமிழகத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் பின் செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2021 ஆம் ஆண்டுக்கான விடுதலை சிறுத்தைகள் சார்பாக விருதுகள் வழங்கும் விழா டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அதில் தமிழக முதல்வர் அவர்களுக்கு அம்பேத்கர் விருது வழங்கப்பட உள்ளது, அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு அம்பேத்கர் விருது பெற்றுக் கொள்ள உள்ளார் என்றார். மேலும் ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பாமக தலைமையை தனது கட்சித் தொண்டர்களை நல்வழிப்படுத்த வேண்டும், எந்த சமூகத்திற்காக பாடுபடுகிறோம் என்று சொல்கிறார்களோ அதே சமூகம் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் அக்காட்சி தலைமையில் நடந்து கொள்கிறது. ஒரு கட்சித் தலைமையே இவ்வாறு செயல்பட்டால் தொண்டர்கள் எப்படி நடந்துகொள்வார்கள், இதனால் சமூகப் பதற்றம் ஏற்படும் சூழல் அதிகரித்துள்ளது. இது தடுக்கப்படவேண்டும் தவிர்க்கப்பட வேண்டும்.

நடிகர் சூர்யா உள்நோக்கம் ஏதும்  இல்லை என்று அறிவித்த பிறகும், அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்கிய பிறகும் தொடர்ந்து பாமகவினர் அவருக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். பாமக தலைமை தன் தொண்டர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றார். ஜெய் பீம் விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு பெரிய நடிகர்களின் ஆதரவு கொடுக்கவில்லை என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என உச்ச நட்சத்திரங்கள் எண்ணகூடும், அதனால் இந்த விவகாரத்தை கடந்து செல்ல அவர்கள் மௌனமாய் இருக்கூடும் என்றும் அவர் கூறினார். தமது எண்ணமும் அதுதான் என்றார்.

அதேபோல் சென்னை எழும்பூர் பகுதியில் சாலையில் வசிக்கும் மக்களை அருகிலுள்ள கண்ணப்பர் திடலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என குற்றம் சாட்டிய அவர் அவர்களுக்கு குடியிருப்பு வழங்கப்படும் என தெரிவித்த நிலையில் இன்னும் குடியிருப்பு வழங்காதது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார். கள்ளக்குறிச்சியில் பழங்குடியினர் 5 பேர் வலுக்கட்டாயமாக காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றது குறித்த முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றார். 

click me!