அப்போ ஒரு பேச்சு… இப்போ ஒரு பேச்சா….? ஸ்டாலினை போட்டு தாக்கும் அண்ணாமலை…

By manimegalai aFirst Published Nov 18, 2021, 8:33 AM IST
Highlights

எதிர்க்கட்சியாக இருக்கும் போது நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கோரிய ஸ்டாலின் இப்போது 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளித்திருப்பதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார்.

எதிர்க்கட்சியாக இருக்கும் போது நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கோரிய ஸ்டாலின் இப்போது 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளித்திருப்பதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார்.

மழை, வெள்ளம் சென்னையை மட்டும் தான் போட்டு தாக்கி வருகிறது என்று அனைவரும் நினைத்திருந்த தருணம். சென்னையை விட அதிக பாதிப்பில் தென் மாவட்டங்கள் இருக்கிறது என்ற விவரம் படிப்படியாக வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்தது.

அதுவும் கன்னியாகுமரியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடரும் மழையால் ஆயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் மக்களின் இயல்பு வாழ்க்கை இப்போது தலைநகர் சென்னையில் இருந்து தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரிக்கு திரும்பி இருக்கிறது.

கன்னியாகுமரியை நோக்கி அனைத்து அரசியல் தலைவர்கள் தங்களது பயணத்தை திருப்பி உள்ளனர். பாதிக்கப்பட்டு உள்ள பகுதிகளை பார்வையிட்டு, மக்களையும் சந்தித்து வருகின்றனர். இந் நிலையில் வெள்ள பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்து உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

ஆனால் இந்த அறிவிப்பு போதாது என்றும், எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் அப்போது அரியணையில் இருக்கும் அரசுக்கு விடுத்த கோரிக்கையை நினைவுபடுத்தி பார்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்து உள்ளன.

குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினை கடுமையாக கேள்விகளை முன் வைத்திருக்கிறார். எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் பேசிய சில விஷயங்களை ரீவைண்ட் பண்ணியி அவர், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் நிவாரணம் என்பது அவர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறி இருக்கிறார்.

எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது நிவர் புயல் காலத்தில் ஏக்கருக்கு 30000 ரூபாய் வழங்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்தார். இப்போது அவர் முதலமைச்சராக இருக்கிறார். அவர் அறிவித்து இருக்கும் 20000 ரூபாய் நிவாரணத்தை விவசாயிகள் ஏற்க மாட்டார்கள்.

எனவே எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது நிவர் புயல் சமயத்தில் அவர் கோரிய 30000 ஆயிரம் ரூபாயை ஒரு ஏக்கருக்கு நிவாரணமாக தமிழக அரசு அளிக்க வேண்டும் என்று போட்டு தாக்கி இருக்கிறார் அண்ணாமலை.

ஆனால் அண்ணாமலையின் இந்த கருத்தையும், கோரிக்கையையும் கண்ட டுவிட்டராட்டிகள் அவரை உண்டு, இல்லை என்று அதகளம் பண்ணி கருத்துகளை போட்டு தாக்க வருகின்றனர். பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை 40 ரூபாய்க்கு குறைப்பதாக அறிக்கை விட்டீர்கள்? என்ன ஆச்சு? 15 லட்சம் ரூபாய் தருவதாக சொன்னீர்களே? அது எங்கே? என்று பிளாஷ்பேக்கை போட்டு கலாய்த்து தள்ளி இருக்கின்றனர்.

அதிலும் ஒருவர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும் போது நடத்திய போராட்டங்களை பதிவிட்டு ஏகத்துக்கும் கமெண்ட் அடித்திருக்கிறார். ஊரடங்கு காலத்தில் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் மதுக்கடைகள் எதுக்கு? என்ற பதாகையுடன் ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்ட போட்டோவை போட்டு கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அதே நேரத்தில் உடன்பிறப்புகளும் பதிலடியால் அண்ணாமலையையும், பாஜகவையும் கலாய்த்து தள்ளி வருகின்றனர். நாட்டை சீரமைக்க 50 நாட்கள் எனக்கு கொடுங்கள்.. முடியாவிட்டால் கொளுத்துங்கள் என்று பிரதமர் மோடி கூறியதை எடுத்து போட்டு, இது எப்படி இருக்கு என்று பட்டாசு கிளப்பி இருக்கின்றனர்.

click me!