மணிப்பூரில் பாரதிய ஜனதா ஆட்சி ஆட்சி  - முதல்வராக பிரேன் சிங் தேர்வு 

First Published Mar 13, 2017, 9:21 PM IST
Highlights
Bharatiya Janata regime in Manipur - piren Singh to CM


வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது. அந்த கட்சியைச் சேர்ந்த நாங்தோம்பம் பிரேன் சிங் முதல் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

60 தொகுதிகள்

மணிப்பூரில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 28 தொகுதிகளை காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சி 21 தொகுதிகளையும் கைப்பற்றின.

ஆட்சிக்கு பா.ஜனதா உரிமை

மற்ற கட்சிகள் 11 இடங்களைப் பெற்று இருந்தன. ஆனால், தனிப் பெரும் கட்சியாக காங்கிரஸ் கட்சி இருந்தபோதிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளான தேசிய மக்கள் கட்சி(என்.பி.பி.), லோக் ஜனசக்தி கட்சி(எல்.ஜே.பி.), நாகா மக்கள் முன்னணி(என்.பி.எப்.) ஆகிய கட்சிகளின் ஆதரவோடு பாரதிய ஜனதா அங்கு ஆட்சி அமைக்க 32 எம்.எல்.ஏ.க்களோடு உரிமை கோரி இருக்கிறது.

ஆளுநருடன் சந்திப்பு

இதற்கிடையே முதல்வர் இபோபி சிங், துணை முதல்வர் கெய்காம்கம், காங்கிரஸ் தலைவர் டி.என். ஹவோகிப் ஆகியோர் நேற்று முன் தினம் இரவு ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவைச் சந்தித்தனர். அப்போது, அடுத்த ஆட்சி அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டன என்பதால், உடனடியாக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுங்கள் என்று முதல்வர் இபோபி சிங்கிடம், ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா வலியுறுத்தினார்.

விதிமுறையின்படி, இப்போதைய முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், அடுத்த அரசு அமைப்பதற்கான எந்த பணியையும் தொடங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரப்பூர்வ கடிதம்

மேலும் இந்த சந்திப்பின் போது, இபோபி சிங், தங்களுக்கு 28 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும், தேசிய மக்கள் கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அப்போது, உங்களுக்கு ஆதரவு தரும் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து வர வேண்டும் என்றும், அந்த கட்சியின் ‘லெட்டர்பேடில்’ 4 எம்.எல்.ஏ.க்கள் கையொப்பம், கட்சி தலைமை ஆதரவு கடிதம் இருக்க வேண்டும். சாதாரண காகிதத்தில் தரும் பட்டியலை ஏற்க முடியாது என ஆளுநர் ஹெப்துல்லா கூறியுள்ளார்.

ஆயத்தம்

அதே சமயம், பாரதிய ஜனதா கட்சி தங்கள் கட்சியின் 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதம், தேசிய மக்கள் கட்சியின் தலைவர், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதம், ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. கடிதம், எல்.ஜே.பி. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதம் ஆகியவற்றை ஆளுநரிடம் அளித்துவிட்டது.

முதல்வர் வேட்பாளர்

இதையடுத்து, மணிப்பூர் மாநிலத்தில் முதல் முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைய இருக்கும் நிலையில், அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளராக நாங்தோம்பம் பிரேன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று டெல்லியில் அறிவித்தார்.

அப்போது, அவர் பேசுகையில், “ மணிப்பூரில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க முதல்வர் வேட்பாளர் பிரேன் சிங் ஆளுநரிடம் விரைவில் உரிமை கோருவார்'' என்று அவர் தெரிவித்தார்.

இதையடுத்து இன்றோ அல்லது நாளையோ ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவை சந்திக்கும் பிரேன் சிங், ஆட்சி அமைக்க உரிமை கோருவார் எனத் தெரிகிறது.

யார் இந்த பிரேன் சிங்?

56 வயதாகும் நாங்தோம்பம் பிரேன் சிங் தேசிய அளவிலான கால்பந்து வீரர் ஆவர். பின், பத்திரிகையாளராகவும் பணியாற்றியவர். கடந்த 2002ம் ஆண்டு ஜனநாயக புரட்சிகர மக்கள் கூட்டணி கட்சி மூலம் ஹெய்காங் தொகுதியில் எம்.எல்.ஏ.ஆனார். 2003ம் ஆண்டு மே மாதம், மாநில ஊழல் ஒழிப்புத்துறை அமைச்சராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

காங்கிரஸ் அரசில் முதல்வர் இபோபி சிங்குக்கு மிகுந்த நம்பிக்கைக்கு உரியவராகவும், வலதுகை போன்று பிரேன் சிங் செயல்பட்டார். அதன்பின் கடந்த 2016ம் ஆண்டு முதல்வர் இபோபி சிங்குக்கு எதிராக கலகம் செய்து கட்சியில் இருந்து வெளியேறி பாரதிய ஜனதா கட்சியில் கடந்த ஆண்டு அக்டோபரில் இணைந்தார். இந்த தேர்தலில் ஹெய்காங் தொகுதியில் போட்டியிட்ட பிரேன் சிங், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பாங்கிஜம் சரத்சந்திராவை தோற்கடித்தார்.

இபோபி சிங் இன்று ராஜினாமா

இம்பால் நகரில் முதல்வர் இபோபி சிங் கூறுகையில், “ மணிப்பூரில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் அங்கு தொங்கு சட்டசபை நிலவுகிறது. அங்கு புதிய ஆட்சி அமைய வேண்டிய சூழல் நிலவுவதால், எனது முதல்வர் பதவியை நாளை(இன்று) ராஜினாமா செய்ய இருக்கிறேன்.

தனி பெரும் கட்சியான இருக்கும் காங்கிரஸ் கட்சிக்குதான் பெரும்பான்மையை நிரூபிக்க முதலில் அழைத்து இருக்க வேண்டும். அவ்வாறு வாய்ப்பு அளித்தால், எனது பெரும்பான்மையை அழைக்க நான் தயார். என்னிடம் போதுமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கிறது'' என்றார்.

பிரதமருக்கும்,கட்சிக்கும் நன்றி...

முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரேன்சிங் நிருபர்களிடம் கூறுகையில், “ மணிப்பூர் மாநிலத்தின் முதல்வராக என்னைத் தேர்வு செய்த பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சித் தலைமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சி, மோசமான நிர்வாகம் ஆகியவற்றை எதிர்த்து கட்சியை விட்டு வெளியேறினேன். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் சிறந்த நிர்வாகத்தை நான் வழங்குவேன் என நான் உறுதி கூறுகிறேன்'' எனத் தெரிவித்தார்.

click me!