அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு... விசாரணையில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகல்!!

By Narendran SFirst Published Aug 5, 2022, 4:18 PM IST
Highlights

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகியதை அடுத்து அவற்றை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனை நியமித்து தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகியதை அடுத்து அவற்றை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனை நியமித்து தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி உத்தரவிட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு 3 வாரங்கள் கடந்துள்ளன. இதில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப் உள்ளிட்ட பலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

ஓ.பன்னீர்செல்வமும் பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பல மூத்த நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடந்த வழக்கு மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்தது உயர்நீதிமன்றம்.

மேலும் செய்திகளுக்கு..என் அக்கவுண்ட்ல 2,700 கோடியா.. செங்கல் சூலை தொழிலாளருக்கு அடிச்ச லக்.. கடைசியில் பாவம்யா ?

தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உச்சநீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்திருப்பதால் அதனை மீற முடியாது, சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம், விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என கடந்த ஜூலை 11ஆம் தேதி காலை 9 மணிக்கு உத்தரவிட்டார். ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, அதிமுக பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீடு செய்தார். 

அவரது மனுவில் ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாகவும், பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார் பன்னீர்செல்வம். நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியை இந்த வழக்கு விசாரணையில் இருந்து மாற்ற வேண்டும். வழக்கை வேறு அமர்விற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

தலைமை நீதிபதி பண்டாரியிடம் இதற்காக கடிதம் அனுப்பப்பட்டது. இதில் தலைமை நீதிபதி இன்னும் முடிவு எடுக்கவில்லை.  இந்த நிலையில் இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை திங்கள் கிழமை தள்ளிவைக்கும்படி ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

மேலும் செய்திகளுக்கு..அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான்.. அடித்து சொல்லும் கர்நாடக ஆசிரமத்தின் ஐதீகம் - ஒர்க்அவுட் ஆகுமா ?

நீதிபதி ஏன் என கேள்வி எழுப்பியபோது, ஓபிஎஸ் தரப்பில், ஜூலை 11ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தனக்கு எதிரான கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளதால் இந்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, நீதிபதியை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தது குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார். 

இந்த நடவடிக்கை நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் மட்டுமல்ல, கீழ்த்தரமான செயல் எனவும் அதிருப்தியை பதிவு செய்த நீதிபதி, தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகவும், திருத்தம் இருந்தால் தன்னிடம் முறையீடு செய்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கேட்டுள்ளனர். வரிசையாக பின்னடைவை சந்தித்து வரும் ஓபிஎஸ் தரப்புக்கு இது பெரும் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

இதனிடையே நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரையை ஏற்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனை நியமித்து உத்தரவிட்டுள்ளார். நாளை முதல் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்குகளை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிப்பார்.

மேலும் செய்திகளுக்கு..“ஆப்ரேஷன் தாமரை 2.0 - தமிழகம் வருகிறார் அமித்ஷா.." அலெர்ட் ஆன திமுக !

click me!