Kitchen Tips : இல்லத்தரசிகளுக்கு சமையலறையில் உதவும் பயனுள்ள 10 டிப்ஸ்களை இந்த பதிவில் காணலாம்.
சமையலறையில் இல்லத்தரசிகள் சில மாற்றங்களை மேற்கொள்ளும் போது வேலைகள் எளிதாகும். வீட்டு செலவுகள் குறையவும் வாய்ப்புள்ளது. இந்த பதிவில் வதங்கிய காய்கறியை 'ப்ரெஷ்' ஆக மாற்றுவது முதல் பலகாரங்களை நீண்டகாலம் நமத்து போகாமல் வைப்பது வரைக்கும் பல டிப்ஸ்களை பார்க்கலாம்.
1). தோசை மாவு:
அரிசி, உளுந்து ஆகியவை ஊறப் போட்டுதான் பொதுவாக தோசை மாவு அரைப்பார்கள். இப்படி தோசை சுடுவதுதான் எல்லோர் வீட்டிலும் வழக்கம். ஆனால் தோசைக்கு மாவு அரைக்கும் போது கூடவே ஒரு கைப்பிடி தோல் நீக்கப்பட்ட வேர்க்கடலையை சேர்த்து அரைத்து விடுங்கள். அதில் தோசை சுட்டு சாப்பிடும் போது இன்னும் இன்னும் என நாவு கேட்கும் அளவுக்கு ருசி அதிகமாக இருக்கும்.
2). சுவையான ரசம்:
ரசம் பொதுவாக பலருக்கும் பிடிக்காத குழம்பு வகைகளில் ஒன்று. பலர் ரசத்தைக் கண்டாலே தெறித்து ஓடுவார்கள். ஆனால் ரசம் சமைக்கும் போது அதனுடன் சிறிதளவு மட்டன் சூப் கலந்துவிட்டால் ருசி பிரமாதமாக இருக்கும்.
இதையும் படிங்க: Kitchen Tips : இல்லத்தரசிகளே அவசியம் இந்த 7 கிச்சன் டிப்ஸ தெரிஞ்சு வச்சுக்கோங்க..
3). தேங்காய் துருவல்
தேங்காயை சிறுசிறு துண்டுகளாக வெட்டி அதனை ஃப்ரீஸரில் 1 மணி நேரம் வைத்துவிடுங்கள். பின்னர் எடுத்து மிக்ஸியில் சில வினாடிகள் அரைத்தால் பூப்போல தேங்காய் துருவல் ரெடி.
4) வடக தோசை:
வீட்டில் சமைத்தச் சோறு மீதமாகிவிட்டால் அதனை மிக்ஸியில் அரைத்துகொள்ளுங்கள். அதனுடன் ஒரு தேக்கரண்டி கடலை மாவு, மூன்று தேக்கரண்டி அரிசி மாவு, போதுமான அளவு உப்பு ஆகியவை கலந்து கொள்ளுங்கள். இதனுடன் தேவையான அளவு மோர் விட்டு தோசை மாவு பதத்திற்கு வந்ததும் தோசையாக சுட்டு சாப்பிடலாம்.
இதையும் படிங்க: இல்லத்தரசிகளுக்கான யாரும் சொல்லாத சூப்பரான சமையல் குறிப்புகள்!!
5). ப்ரெஷ் காய்கறிகள்
காய்கறிகள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள்ளாக சமைக்காவிட்டால் வாடி வதங்கி விடும். அப்படி வதங்கிய காய்கறிகளை குப்பையில் போடாமல் அதன் மீது சில சொட்டு எலுமிச்சை பழச்சாறு பிழிந்து விடுங்கள். சில மணி நேரங்களில் காய்கறிகள் புதியவை போல மாறிவிடும்.
6). பலகாரங்கள்
வீட்டில் செய்யும் பலகாரங்கள் அல்லது கடையில் வாங்கும் பலகாரங்கள் எதுவானாலும் சீக்கிரமாக நமத்து போவதால் அவற்றை உண்ணும் போது சலிப்பு தட்டி விடும். என்னதான் டப்பாவிற்குள் அடைத்து வைத்தாலும் இந்த நிலைக்கு வந்துவிடும். இதை தடுக்க பலகாரங்களுக்கு அடியிலே ஒரு உப்பு பொட்டலத்தை வைத்தால் போதும்.
7). வெந்தயக் கீரை:
வெந்தயக் கீரை உடலுக்கு பல நன்மைகளும் செய்யக்கூடியது. ஆனால் அதன் கசப்பு சுவை காரணமாக குழந்தைகள் விரும்பி உண்ணமாட்டார்கள். அவ்வளவு ஏன் பெரியவர்கள் கூட தவிர்க்க வாய்ப்புள்ளது. ஆனால் சிறிதளவு வெல்லம் போட்டு சமைத்தால் கசப்பு சுவை இருக்காது.
8). சுவையான பஜ்ஜி:
பஜ்ஜி செய்வதற்கு வாழைக்காய் அல்லது உருளைக்கிழங்கை பயன்படுத்துவோம். அதை நேரடியாக வெட்டியதும் பஜ்ஜி போடாமல், மிளகாய் தூள், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவையுங்கள். ஊறிய பிறகு பஜ்ஜி மாவில் தொட்டு பஜ்ஜி போட்டால் சுவை அபாரமாக இருக்கும்.
வாழைக்காயை நறுக்கினால் கையில் கறை படியும். இதை தவிர்க்க வாழைக்காய் வெட்டும் முன் கைகளில் உப்பு தடவிவிடுங்கள். இதனால் பிசுபிசுப்பு, கறையை தடுக்கலாம்.
9). பபுள் கம் நீக்க!
துணிகளில் ஒட்டிக் கொள்ளும் பபுள் கம், சுவிங்கம் போன்றவற்றை நீக்க ஐஸ் கட்டிகளை வைத்து தேய்க்கலாம். அதை அதன் மீது வைத்து தேய்க்கும்போது பபுள் கம் நீங்க ஆரம்பிக்கும். இறுதியில் ஒட்டியுள்ள துகள்களை ஸ்க்ரப்பர் வைத்து தேய்க்கலாம்.
10). வாழை கறை நீங்க!
துணியில் வாழை கறைப்பட்டால் போகவே போகாது. அதை நீக்க பழைய டூர் ப்ரஷில் பெட்ரோல்விட்டு துணியில் கறை உள்ள இடத்தில் தேயுங்கள். இதனால் வாழை கறை நீங்கும். பின்னர் சோப்பை வைத்து துணியை நன்றாக துவைத்தால் போதும்.