ஐபிஎல் வரலாற்றில் அபார சாதனை படைத்த வார்னர் - பேர்ஸ்டோ ஜோடி!!

By karthikeyan VFirst Published Apr 1, 2019, 1:31 PM IST
Highlights

தொடக்கம் முதலே பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடினர். முதல் விக்கெட்டை வீழ்த்தவே ஆர்சிபி அணி திணறியது. அதிரடியாக ஆடிய ஜானி பேர்ஸ்டோ, ஐபிஎல்லில் தனது முதல் சதத்தை விளாசினார். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்தது. 

டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் கோலி, சன்ரைசர்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தார். சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவும் வார்னரும் இணைந்து ஆர்சிபியை அலறவிட்டனர். 

தொடக்கம் முதலே பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடினர். முதல் விக்கெட்டை வீழ்த்தவே ஆர்சிபி அணி திணறியது. அதிரடியாக ஆடிய ஜானி பேர்ஸ்டோ, ஐபிஎல்லில் தனது முதல் சதத்தை விளாசினார். 56 பந்துகளில் 114 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார் பேர்ஸ்டோ. முதல் விக்கெட்டுக்கு பேர்ஸ்டோ - வார்னர் ஜோடி 185 ரன்களை குவித்தது. அதன்பின்னர் களத்திற்கு வந்த விஜய் சங்கர் ஒரு சிக்சருடன் 3 பந்துகளில் 9 ரன்கள் அடித்து ரன் அவுட்டாகி வெளியேறினார். 

பின்னர் வார்னருடன் யூசுப் பதான் ஜோடி சேர்ந்தார். கடைசி ஓவரில் வார்னரும் சதத்தை எட்டினார். தொடக்க வீரர்கள் இருவருமே சதமடிக்க, சன்ரைசர்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 231 ரன்களை குவித்தது. 232 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியில் கோலி, ஹெட்மயர், டிவில்லியர்ஸ், பார்த்திவ் படேல், ஷிவம் துபே என யாருமே சோபிக்கவில்லை. அந்த அணி வெறும் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் அணி.

இந்த போட்டியில் வார்னரும் பேர்ஸ்டோவும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 185 ரன்களை குவித்தனர். ஐபிஎல் வரலாற்றில் தொடக்க ஜோடி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்னதாக காம்பீரும் கிறிஸ் லின்னும் இணைந்து 2017ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக அடித்த 184 ரன்கள் தான் தொடக்க ஜோடி அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. அதை முறியடித்து சாதனை படைத்துள்ளது வார்னர் - பேர்ஸ்டோ ஜோடி. 
 

click me!