சன்ரைசர்ஸிடம் மரண அடி வாங்கிய ஆர்சிபி.. நாங்க சுத்த வேஸ்ட்டுங்க.. ஆர்சிபி கேப்டன் கோலி ஒப்புதல் வாக்குமூலம்

By karthikeyan VFirst Published Apr 1, 2019, 1:00 PM IST
Highlights

ஐபிஎல் 12வது சீசனும் ஆர்சிபி அணிக்கு சரியாக அமையவில்லை. இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணி இந்த முறை கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்கியது. 
 

ஐபிஎல் 12வது சீசனும் ஆர்சிபி அணிக்கு சரியாக அமையவில்லை. இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணி இந்த முறை கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்கியது. 

இந்த சீசனில் முதல் போட்டியில் சிஎஸ்கேவை எதிர்கொண்ட ஆர்சிபி அணி, வெறும் 70 ரன்களை மட்டுமே எடுத்து, சிஎஸ்கேவிடம் தோற்றது. பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. 

முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில், நேற்று சன்ரைசர்ஸை எதிர்கொண்டது ஆர்சிபி அணி. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் கோலி, சன்ரைசர்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தார். சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவும் வார்னரும் இணைந்து ஆர்சிபியை அலறவிட்டனர். 

தொடக்கம் முதலே பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடினர். முதல் விக்கெட்டை வீழ்த்தவே ஆர்சிபி அணி திணறியது. அதிரடியாக ஆடிய ஜானி பேர்ஸ்டோ, ஐபிஎல்லில் தனது முதல் சதத்தை விளாசினார். 56 பந்துகளில் 114 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார் பேர்ஸ்டோ. முதல் விக்கெட்டுக்கு பேர்ஸ்டோ - வார்னர் ஜோடி 185 ரன்களை குவித்தது. அதன்பின்னர் களத்திற்கு வந்த விஜய் சங்கர் ஒரு சிக்சருடன் 3 பந்துகளில் 9 ரன்கள் அடித்து ரன் அவுட்டாகி வெளியேறினார். 

பின்னர் வார்னருடன் யூசுப் பதான் ஜோடி சேர்ந்தார். கடைசி ஓவரில் வார்னரும் சதத்தை எட்டினார். தொடக்க வீரர்கள் இருவருமே சதமடிக்க, சன்ரைசர்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 231 ரன்களை குவித்தது. 232 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியில் கோலி, ஹெட்மயர், டிவில்லியர்ஸ், பார்த்திவ் படேல், ஷிவம் துபே என யாருமே சோபிக்கவில்லை. அந்த அணி வெறும் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் அணி.

போட்டிக்கு பின்னர் பேசிய ஆர்சிபி கேப்டன் கோலி, எங்களுடைய மோசமான தோல்விகளில் இதுவும் ஒன்று. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆட்டத்தின் முதல் பந்திலிருந்தே ஆட்டம் முடியும்வரை எதுவுமே எங்களுக்கு சாதகமாக இல்லை. நாங்கள் பேட்டிங், பவுலிங் என அனைத்திலுமே சொதப்பிவிட்டோம். அவர்கள் சாம்பியன் என்பதை காட்டிவிட்டார்கள். கடந்த சீசனில் இறுதி போட்டிவரை சென்றது சன்ரைசர்ஸ் அணி. 2016ல் எங்களை இறுதி போட்டியில் வீழ்த்தி கோப்பையை வென்றார்கள். இந்த வெற்றிக்கான மொத்த கிரெடிட்டும் வார்னர் மற்றும் பேர்ஸ்டோவையே சேரும் என்று கோலி பேசினார். 

கோலியின் மோசமான கேப்டன்சியால்தான் ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை என காம்பீர் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கோலியின் கேப்டன்சியில் உள்ள குறைபாடுகளும் ஆர்சிபி அணியின் தொடர் தோல்விகளுக்கு காரணம். வீரர்களை பயன்படுத்தும் விதம், ஆடும் லெவனில் தேர்வு செய்யப்படும் வீரர்கள், கள வியூகம், பவுலிங் சுழற்சி ஆகியவற்றில் கோலியின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. 
 

click me!