ஆட்டத்தின் திருப்புமுனை அந்த 2 சம்பவங்கள் தான்!! அது இரண்டும் நடக்கலைனா சிஎஸ்கே மண்ணை கவ்வியிருக்கும்

By karthikeyan VFirst Published Apr 1, 2019, 12:11 PM IST
Highlights

176 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணியின் விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் மறுமுனையில் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடினார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி, ராயுடு, வாட்சன், கேதர் ஜாதவ் ஆகிய மூன்று விக்கெட்டுகளை 27 ரன்களுக்கே இழந்துவிட்டது. எனினும் தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 175 ரன்களை குவித்தது. 176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியும் 14 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடி வெற்றியை நோக்கி சென்றார். பிராவோ கடைசி ஓவரை அபாரமாக வீசி ஸ்டோக்ஸை வீழ்த்தியதோடு ராஜஸ்தான் அணியை கட்டுப்படுத்தினார். இதையடுத்து கடைசி ஓவரில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சிஎஸ்கே அணி. 

இந்த போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலுமே கடைசி ஓவர் தான் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, 27 ரன்களுக்கே மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில், தான் கடைசி வரை களத்தில் நின்றால் நல்ல ஸ்கோரை எட்ட முடியும் என்று நம்பிய தோனி, நடு ஓவர்களில் அவசரப்படாமல் கடைசி வரை களத்தில் நின்று ஸ்கோரை உயர்த்தினார். ஒரு கட்டத்தில் 150 - 160 ரன்கள் வரை சிஎஸ்கே அடிக்கும் என்ற நிலை இருந்தது. உனாத்கத் வீசிய கடைசி ஓவரில் 28 ரன்களை குவித்து 175 ரன்களை எட்ட வைத்தார் தோனி. 

176 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணியின் விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் மறுமுனையில் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடினார். கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு வெறும் 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஸ்டோக்ஸை கடைசி ஓவரின் முதல் பந்திலேயே வீழ்த்தினார் பிராவோ. அந்த ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார் பிராவோ. அதனால் சிஎஸ்கே அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இவ்வாறு இரு இன்னிங்ஸ்களின் கடைசி ஓவரும்தான் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. 
 

click me!