நாங்க தோத்ததுக்கு அதுதான் காரணம்.. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுனு பேசிய கோலி

By karthikeyan VFirst Published Apr 6, 2019, 10:46 AM IST
Highlights

ஆண்ட்ரே ரசலின் அதிரடியால் 206 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டி ஆர்சிபி அணியை வீழ்த்தியது கேகேஆர் அணி. 
 

ஆண்ட்ரே ரசலின் அதிரடியால் 206 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டி ஆர்சிபி அணியை வீழ்த்தியது கேகேஆர் அணி. 

முதல் நான்கு போட்டிகளிலும் தோற்ற ஆர்சிபி அணி, முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் கேகேஆர் அணியை நேற்று எதிர்கொண்டது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் விராட் கோலி - டிவில்லியர்ஸ் என்ற வெற்றிகரமான ஜோடி, இந்த சீசனில் முதன்முறையாக ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். 

பார்த்திவ் படேல் 25 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் கோலியுடன் டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த சீசனில் இதுவரை சரியாக ஆடாத இந்த ஜோடி, நேற்றைய போட்டியில் ரசிகர்களின் ஏக்கத்தை தீர்த்தது. இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 108 ரன்களை சேர்த்தனர். 17 ஓவருக்கே ஆர்சிபி அணி 172 ரன்களை குவித்துவிட்டது. கோலியும் டிவில்லியர்ஸும் களத்தில் நிலைத்து நின்றதால், கடைசி 3 ஓவர்களில் 40-50 ரன்கள் வரை கண்டிப்பாக குவித்திருக்கலாம். ஆனால் 18வது ஓவரின் முதல் பந்திலேயே கோலி ஆட்டமிழந்தார். 

49 பந்துகளில் 84 ரன்களை குவித்து கோலி ஆட்டமிழக்க, அதற்கு அடுத்த ஓவரில் டிவில்லியர்ஸும் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சில ஷாட்டுகளை அடித்து ரன்னை உயர்த்தினார். ஒருவழியாக 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 205 ரன்களை குவித்தது. 

206 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கிறிஸ் லின்னுடன் ராபின் உத்தப்பா ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். இந்த ஜோடி அடித்து ஆடியது. 10 ஓவர்களிலேயே 100 ரன்களை எட்டியது கேகேஆர் அணி. எனினும் அடித்து ஆடிய உத்தப்பா 33 ரன்களில் ஆட்டமிழக்க, லின்னும் 43 ரன்களில் வெளியேறினார். அதன்பின்னர் நிதிஷ் ராணாவும் தினேஷ் கார்த்திக்கும் மிடில் ஓவர்களில் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். ஆனால் ரன்ரேட் குறைந்தது. 

நிதிஷ் ராணா 37 ரன்களில் ஆட்டமிழக்க, களத்திற்கு வந்தார் ஆண்ட்ரே ரசல். நவ்தீப் சைனியின் பந்தில் தினேஷ் கார்த்திக்கும் ஆட்டமிழக்க, கேகேஆர் அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 53 ரன்கள் தேவைப்பட்டது. 18வது ஓவரில் ஒரு நோ பால் ஒன்று கிடைக்க, அந்த ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசினார் ஆண்ட்ரே ரசல். கடைசி 2 ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது. டிம் சௌதி வீசிய 19வது ஓவரில் ரசல் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்தார். ஒரு சிங்கிள் உட்பட அந்த ஓவரில் 29 ரன்கள் குவிக்கப்பட்டன. கடைசி ஓவரில் ஒரு ரன்னே தேவை என்ற நிலையில், முதல் பந்திலேயே அந்த ஒரு ரன்னை எடுத்து கேகேஆர் அபார வெற்றி பெற்றது. 

போட்டிக்கு பின்னர் பேசிய ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, நாங்கள் இன்னும் 20-25 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம். நான் தவறான நேரத்தில் ஆட்டமிழந்துவிட்டேன். எனினும் 205 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான். கடைசி 4 ஓவரில் எங்கள் பவுலர்கள் பந்துவீசிய விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. நெருக்கடியான சூழலில் கவனமுடனும் சாமர்த்தியமாகவும் பந்துவீச வேண்டும். இந்த சீசனில் இதுவரை நெருக்கடியான சூழல் வந்தபோதெல்லாம் அதை சரியாக சமாளித்து ஆடாமல் தோல்வியடைந்துவிட்டோம். நெருக்கடியான சூழல்களில் பவுலர்கள் தைரியமாக சரியான ஏரியாக்களில் பந்துவீச வேண்டும். ரசல் மாதிரியான ஒரு பவர் ஹிட்டர் பேட்டிங் ஆடும்போது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் கடைசி 4 ஓவர்களில் 75 ரன்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால், 100 ரன்களைக்கூட கட்டுப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது. தோல்வி குறித்து விவாதிக்க வேண்டும். அதேநேரத்தில் இதுகுறித்து அதிகம் பேசுவது எந்த விதத்திலும் பயன்படாது. வீரர்கள் அடுத்த போட்டிக்கு இன்னும் தீவிரமாக தயாராக வேண்டும் என்று கோலி தெரிவித்தார். 

click me!