எவ்வளவு ரன் அடிச்சாலும் பதிலுக்கு அடிக்கிறாங்களே!! ஆண்ட்ரே ரசலின் அதிரடியால் கடின இலக்கை விரட்டிய கேகேஆர்.. ஆர்சிபிக்கு அடுத்த அடி

By karthikeyan VFirst Published Apr 6, 2019, 9:49 AM IST
Highlights

ஆண்ட்ரே ரசலின் அதிரடியால் 206 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டி ஆர்சிபி அணியை வீழ்த்தியது கேகேஆர் அணி. 
 

ஆண்ட்ரே ரசலின் அதிரடியால் 206 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டி ஆர்சிபி அணியை வீழ்த்தியது கேகேஆர் அணி. 

முதல் நான்கு போட்டிகளிலும் தோற்ற ஆர்சிபி அணி, முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் கேகேஆர் அணியை நேற்று எதிர்கொண்டது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் விராட் கோலி - டிவில்லியர்ஸ் என்ற வெற்றிகரமான ஜோடி, இந்த சீசனில் முதன்முறையாக ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். 

பார்த்திவ் படேல் 25 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் கோலியுடன் டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த சீசனில் இதுவரை சரியாக ஆடாத இந்த ஜோடி, நேற்றைய போட்டியில் ரசிகர்களின் ஏக்கத்தை தீர்த்தது. இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 108 ரன்களை சேர்த்தனர். 17 ஓவருக்கே ஆர்சிபி அணி 172 ரன்களை குவித்துவிட்டது. கோலியும் டிவில்லியர்ஸும் களத்தில் நிலைத்து நின்றதால், கடைசி 3 ஓவர்களில் 40-50 ரன்கள் வரை கண்டிப்பாக குவித்திருக்கலாம். ஆனால் 18வது ஓவரின் முதல் பந்திலேயே கோலி ஆட்டமிழந்தார். 

49 பந்துகளில் 84 ரன்களை குவித்து கோலி ஆட்டமிழக்க, அதற்கு அடுத்த ஓவரில் டிவில்லியர்ஸும் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சில ஷாட்டுகளை அடித்து ரன்னை உயர்த்தினார். ஒருவழியாக 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 205 ரன்களை குவித்தது. 

206 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கிறிஸ் லின்னுடன் ராபின் உத்தப்பா ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். இந்த ஜோடி அடித்து ஆடியது. 10 ஓவர்களிலேயே 100 ரன்களை எட்டியது கேகேஆர் அணி. எனினும் அடித்து ஆடிய உத்தப்பா 33 ரன்களில் ஆட்டமிழக்க, லின்னும் 43 ரன்களில் வெளியேறினார். அதன்பின்னர் நிதிஷ் ராணாவும் தினேஷ் கார்த்திக்கும் மிடில் ஓவர்களில் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். ஆனால் ரன்ரேட் குறைந்தது. 

நிதிஷ் ராணா 37 ரன்களில் ஆட்டமிழக்க, களத்திற்கு வந்தார் ஆண்ட்ரே ரசல். நவ்தீப் சைனியின் பந்தில் தினேஷ் கார்த்திக்கும் ஆட்டமிழக்க, கேகேஆர் அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 53 ரன்கள் தேவைப்பட்டது. 18வது ஓவரில் ஒரு நோ பால் ஒன்று கிடைக்க, அந்த ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசினார் ஆண்ட்ரே ரசல். கடைசி 2 ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது. டிம் சௌதி வீசிய 19வது ஓவரில் ரசல் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்தார். ஒரு சிங்கிள் உட்பட அந்த ஓவரில் 29 ரன்கள் குவிக்கப்பட்டன. கடைசி ஓவரில் ஒரு ரன்னே தேவை என்ற நிலையில், முதல் பந்திலேயே அந்த ஒரு ரன்னை எடுத்து கேகேஆர் அபார வெற்றி பெற்றது. 

ஆட்டநாயகனாக ஆண்ட்ரே ரசல் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ச்சியாக 5 தோல்விகளை தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது ஆர்சிபி அணி. இந்த சீசன் ஆர்சிபி அணிக்கு மிகவும் மோசமாக அமைந்துவிட்டது. இனிமேல் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை.
 

click me!