ஆர்சிபி vs கேகேஆர் போட்டி.. கடும் சிக்கலில் கோலி, டிவில்லியர்ஸ்

By karthikeyan VFirst Published Apr 5, 2019, 5:59 PM IST
Highlights

இதுவரை ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இந்த சீசனில் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களம் கண்டது. ஆனால் இந்த சீசன் கடந்த சீசன்களை விட மோசமாக அமைந்துள்ளது. இதுவரை ஆடிய நான்கு போட்டிகளிலும் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 
 

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வீரராகவும் கேப்டனாகவும் ஜொலித்துவரும் கோலிக்கு ஐபிஎல் தான் சிம்மசொப்பனமாக திகழ்கிறது. இதுவரை ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இந்த சீசனில் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களம் கண்டது. ஆனால் இந்த சீசன் கடந்த சீசன்களை விட மோசமாக அமைந்துள்ளது. இதுவரை ஆடிய நான்கு போட்டிகளிலும் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

ஆர்சிபி அணி தோல்விகளை சந்தித்தாலும் விராட் கோலியின் ஆட்டத்தில் குறையிருக்காது. ஆனால் இந்த சீசனில் விராட் கோலியும் சோபிக்கவில்லை. தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பிவருகிறார். குறிப்பாக ரிஸ்ட் ஸ்பின்னர்களிடம் சரணடைந்துவிடுகிறார். 

அவர் மட்டுமல்லாமல் டிவில்லியர்ஸும் ரிஸ்ட் ஸ்பின்னர்களிடம் விக்கெட்டை பறிகொடுத்து விடுகிறார். ஆர்சிபி அணி கோலி மற்றும் டிவில்லியர்ஸையே அதிகமாக சார்ந்துள்ளது. அப்படியிருக்கையில் இவர்கள் இருவருமே ரிஸ்ட் ஸ்பின்னர்களிடம் சரணடைந்துவிடுவதால், இவர்களின் பலவீனத்தை அனைத்து அணிகளுமே அறிந்துவைத்துள்ளதால், ரிஸ்ட் ஸ்பின்னர்களை வைத்தே இருவரையும் வீழ்த்தி விடுகின்றனர். 

முஜீபுர் ரஹ்மான், ரஷீத் கான், ஆடம் ஸாம்பா, மார்கண்டே, ஷ்ரேயாஸ் கோபால் ஆகிய ரிஸ்ட் ஸ்பின்னர்களின் பவுலிங்கில் ஆட்டமிழந்துவிடுகின்றனர். இந்த சீசனில் இதுவரை ஆடிய நான்கு போட்டிகளிலும் தோற்றுள்ள ஆர்சிபி அணி, கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இன்று கேகேஆர் அணியை எதிர்கொள்கிறது. கேகேஆர் அணியில், தற்போதைய சூழலில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் குல்தீப் யாதவ் மற்றும் பியூஷ் சாவல் ஆகிய இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்கள் உள்ளனர். எனவே இன்றைய போட்டியில் கோலி மற்றும் டிவில்லியர்ஸை இவர்களை வைத்து வீழ்த்த கேகேஆர் அணி முனையும். 

அவர்கள் இருவரையும் இவர்கள் இருவரும் எதிர்கொண்டு சிறப்பாக ஆட வேண்டும். ஒருவேளை அவர்களிடம் விக்கெட்டை பறிகொடுத்துவிடக்கூடாது என கவனத்துடன் ஆடினாலும் ரன்ரேட் குறைய வாய்ப்புள்ளது. எனவே ரன்ரேட்டும் குறைந்துவிடாமல் அதேநேரத்தில் விக்கெட்டையும் இழந்துவிடாமல் ஆட வேண்டிய கட்டாயத்தில் கோலியும் டிவில்லியர்ஸும் உள்ளனர். 

click me!