சொல்லி அடித்த கில்லிடா கோலி!! சுவாரஸ்ய சம்பவம்

By karthikeyan VFirst Published Apr 20, 2019, 11:44 AM IST
Highlights

இந்த போட்டியில் ஆர்சிபி அணியில் டிவில்லியர்ஸ் ஆடாத நிலையில், போட்டி முடிந்ததும் பேசிய ஆர்சிபி கேப்டன் கோலி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான விராட் கோலி, நிதானமாக தொடங்கினார். 14வது ஓவரில்தான் 100 ரன்களை எட்டியது ஆர்சிபி. அதன்பின்னர் டெத் ஓவர்களில் விராட் கோலி, மொயின் அலி மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய மூவரும் கேகேஆர் அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கி, அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

குல்தீப் யாதவ் வீசிய 16வது ஓவரில் மொயின் அலி பொளந்து கட்டிவிட்டார். அந்த ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உட்பட 27 ரன்களை குவித்து அந்த ஓவரின் கடைசி பந்தில் அவுட்டானார் மொயின் அலி. பின்னர் களத்திற்கு வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸும் அதிரடியாக ஆடினார். சிறப்பாக ஆடிய விராட் கோலி, கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் சதம் விளாசினார். இது ஐபிஎல்லில் அவரது ஐந்தாவது சதமாகும். இன்னிங்ஸின் கடைசிக்கு முந்தைய பந்தில் சதமடித்த கோலி, கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 213 ரன்களை குவித்தது. 

214 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர் கிறிஸ் லின்னை முதல் ஓவரிலேயே டேல் ஸ்டெயின் வீழ்த்திவிட்டார். அதன்பின்னர் நரைன், கில் ஆகியோர் பவர்பிளேயிலேயே ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ராபின் உத்தப்பாவும் நிதிஷ் ராணாவும் மந்தமாக ஆடினர். 20 பந்துகளில் வெறும் 9 ரன்கள் மட்டுமே அடித்து உத்தப்பா நடையை கட்டினார். 12வது ஓவரின் முடிவில் கேகேஆர் அணி வெறும் 79 ரன்கள் எடுத்த நிலையில், உத்தப்பா ஆட்டமிழந்தார். 

அந்த சூழலில் ஆட்டம் ஆர்சிபியின் பக்கம் இருந்தது. அதன்பின்னர் களத்திற்கு வந்தார் அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசல். நிதிஷ் ராணாவுடன் ரசல் ஜோடி சேர்ந்து அடித்து நொறுக்கினார். தொடக்கத்தில் சற்று மந்தமாக ஆடிய ராணாவும் ரசலுடன் இணைந்து பவுண்டரியும்  சிக்ஸருமாக பறக்கவிட்டு அரைசதம் அடித்தார். 14 ஓவர் முடிவில் 101 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது கேகேஆர் அணி. எஞ்சிய 6 ஓவர்களுக்கு அந்த அணியின் வெற்றிக்கு 113 ரன்கள் தேவை. ஆண்ட்ரே ரசல் மற்றும் ராணாவின் அதிரடியான ஆட்டத்தால் அந்த அணி கடைசி 6 ஓவர்களில் 102 ரன்களை குவித்தது. கடுமையாக போராடி கடைசியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்த போட்டியில் ஆர்சிபி அணியில் டிவில்லியர்ஸ் ஆடாத நிலையில், போட்டி முடிந்ததும் பேசிய ஆர்சிபி கேப்டன் கோலி, அறையிலிருந்து பேட்டிங் ஆடவரும்போது, உங்களுக்காக இந்த இன்னிங்ஸில் கண்டிப்பாக சதமடிப்பேன் என்று டிவில்லியர்ஸிடம் கூறிவிட்டு வந்தேன். அதேபோல சதமடித்துவிட்டேன். டிவில்லியர்ஸ் மகிழ்ச்சியாக இருப்பார் என்று நினைக்கிறேன் என கோலி தெரிவித்தார்.

டிவில்லியர்ஸும் டுவிட்டரில் கோலி மற்றும் மொயின் அலியின் இன்னிங்ஸை பாராட்டியிருந்தார். டிவில்லியர்ஸிடம் சொன்னதை போலவே சதமடித்து அசத்தியுள்ளார் கோலி.
 

click me!