வெற்றி - தோல்விலாம் இரண்டாவது விஷயம்.. ஆர்சிபிக்கு எதிரா ரசலும் ராணாவும் போராடுன போராட்டம் செம!! மொயின் அலியின் சாமர்த்தியத்தால் ஆர்சிபி வெற்றி

By karthikeyan VFirst Published Apr 20, 2019, 11:06 AM IST
Highlights

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஆண்ட்ரே ரசலின் அதிரடி இந்த சீசனில் தொடர்ந்துவருகிறது. 
 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஆண்ட்ரே ரசலின் அதிரடி இந்த சீசனில் தொடர்ந்துவருகிறது. 

கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான விராட் கோலி, நிதானமாக தொடங்கினார். 14வது ஓவரில்தான் 100 ரன்களை எட்டியது ஆர்சிபி. அதன்பின்னர் டெத் ஓவர்களில் விராட் கோலி, மொயின் அலி மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய மூவரும் கேகேஆர் அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கி, அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

குல்தீப் யாதவ் வீசிய 16வது ஓவரில் மொயின் அலி பொளந்து கட்டிவிட்டார். அந்த ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உட்பட 27 ரன்களை குவித்து அந்த ஓவரின் கடைசி பந்தில் அவுட்டானார் மொயின் அலி. பின்னர் களத்திற்கு வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸும் அதிரடியாக ஆடினார். சிறப்பாக ஆடிய விராட் கோலி, கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் சதம் விளாசினார். இது ஐபிஎல்லில் அவரது ஐந்தாவது சதமாகும். இன்னிங்ஸின் கடைசிக்கு முந்தைய பந்தில் சதமடித்த கோலி, கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 213 ரன்களை குவித்தது. 

214 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர் கிறிஸ் லின்னை முதல் ஓவரிலேயே டேல் ஸ்டெயின் வீழ்த்திவிட்டார். அதன்பின்னர் நரைன், கில் ஆகியோர் பவர்பிளேயிலேயே ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ராபின் உத்தப்பாவும் நிதிஷ் ராணாவும் மந்தமாக ஆடினர். 20 பந்துகளில் வெறும் 9 ரன்கள் மட்டுமே அடித்து உத்தப்பா நடையை கட்டினார். 12வது ஓவரின் முடிவில் கேகேஆர் அணி வெறும் 79 ரன்கள் எடுத்த நிலையில், உத்தப்பா ஆட்டமிழந்தார். 

அந்த சூழலில் ஆட்டம் ஆர்சிபியின் பக்கம் இருந்தது. அதன்பின்னர் களத்திற்கு வந்தார் அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசல். நிதிஷ் ராணாவுடன் ரசல் ஜோடி சேர்ந்து அடித்து நொறுக்கினார். தொடக்கத்தில் சற்று மந்தமாக ஆடிய ராணாவும் ரசலுடன் இணைந்து பவுண்டரியும்  சிக்ஸருமாக பறக்கவிட்டு அரைசதம் அடித்தார். 14 ஓவர் முடிவில் 101 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது கேகேஆர் அணி. எஞ்சிய 6 ஓவர்களுக்கு அந்த அணியின் வெற்றிக்கு 113 ரன்கள் தேவை. 

ஆனால் அப்படிப்பட்ட நெருக்கடியான சூழலிலும் சற்றும் மனம் தளராத ரசல், மன உறுதியுடன் போராடினார். ராணாவும் ரசலுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அடித்து ஆடினார். சாஹல் வீசிய 15வது ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசினார் ரசல். அந்த ஓவரில் 20 ரன்கள் குவிக்கப்பட்டது. சைனி வீசிய 16வது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 17 ரன்களை குவித்தார் ராணா. 

17வது ஓவரில் 15 ரன்கள் அடிக்கப்பட்டது. ஸ்டெயின் வீசிய 18வது ஓவரை முழுவதுமாக ஆடிய நிதிஷ் ராணா, 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 18 ரன்களை குவித்தார். கடைசி 2 ஓவர்களில் கேகேஆர் அணியின் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது. இந்த இக்கட்டான சூழலில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 19வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் முதல் மூன்று பந்துகளை மார்கஸ் சிறப்பாக வீசினார். கடைசி மூன்று பந்துகளையுமே சிக்ஸர் விளாசினார் ரசல்.

இதையடுத்து கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டது. முக்கியமான அந்த ஓவரை தனது முதல் ஓவராக வீசினார் மொயின் அலி. அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ராணா ஒரு ரன் மட்டுமே எடுத்தார். எஞ்சிய 4 பந்துகளுக்கும் சிக்ஸர் அடிக்க வேண்டியிருந்தது. 3வது பந்தை சிக்ஸர் அடித்து போட்டியை திரில்லாக்கினார் ரசல். ஆனால் அடுத்த பந்தை மொயின் அலி சாமர்த்தியமாக வீசியதால் டாட் பாலானது. அடுத்த பந்தில் ரசல் ரன் அவுட்டாக, கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தார் ராணா. கடைசி 6 ஓவர்களில், ஓவருக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையிலும், அதை அசால்ட்டாக விடாமல் கடுமையாக போராடி வெற்றியை நெருங்கியது கேகேஆர் அணி. கடைசியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தாலும் கேகேஆர் அணியின் போராட்டம் அபாரமானது. 

click me!