ஆர்சிபியை தொடரை விட்டு துரத்தியடித்த சன்ரைசர்ஸ்..! இந்த தடவையும் ஆர்சிபி கனவு தகர்ந்தது

By karthikeyan VFirst Published Nov 6, 2020, 11:24 PM IST
Highlights

எலிமினேட்டரில் ஆர்சிபியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று, ஆர்சிபியை தொடரை விட்டு வெளியேற்றியது சன்ரைசர்ஸ் அணி.
 

ஐபிஎல் 13வது சீசனின் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஆர்சிபியும் மோதின. அபுதாபியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் கேப்டன் கோலி தொடக்க வீரராக இறங்கி, 2வது ஓவரிலேயே ஆறு ரன்களில் ஆட்டமிழந்தார். படிக்கல் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஃபின்ச்சும் டிவில்லியர்ஸும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். ஆனால் அவர்களை அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்யவிடாமல் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தனர் சன்ரைசர்ஸ் பவுலர்கள்.

ஃபின்ச் 32 ரன்களில் அவுட்டாக, மொயின் அலி ரன்னே அடிக்காமல் ரன் அவுட்டாக, ஷிவம் துபே 8 ரன்களுக்கும் சுந்தர் ஐந்து ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய டிவில்லியர்ஸ் அரைசதம் அடித்தார். ஆனால் அவர் டெத் ஓவரில் நிலைத்து நின்று அடித்து ஆடவிடாமல் நடராஜன், 18வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஐம்பத்தாறு ரன்களுக்கு வீழ்த்த, 20 ஓவரில் ஆர்சிபி அணி வெறும் 131 ரன்கள் மட்டுமே அடித்தது.

132 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆடிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி டக் அவுட்டானார். கேப்டன் வார்னரும் 17 ரன்களுக்கு நடையை கட்டினார். மனீஷ் பாண்டேவும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ப்ரியம் கர்க்கும் பொறுப்பற்ற முறையில் பெரிய ஷாட் ஆடப்போய், 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இலக்கு எளிதானது என்பதால் எந்தவித அவசரமும் காட்டாமல், நிதானத்தை கடைபிடித்து, அடிக்க வேண்டிய பந்துகளை மட்டுமே அடித்து ஆடிய வில்லியம்சன், அரைசதம் அடித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுத்தார். வில்லியம்சனுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, கடைசி ஓவரில் 2 பவுண்டரிகளை அடித்து போட்டியை முடித்துவைத்தார் ஜேசன் ஹோல்டர்.

இதையடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி, 2வது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேபிடள்ஸுடன் மோதுகிறது. ஆர்சிபி அணி தொடரை விட்டு வெளியேறியது.
 

click me!