டெல்லி கேபிடள்ஸ் படுதோல்வி.. அபார வெற்றி பெற்று நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ்..!

By karthikeyan VFirst Published Nov 5, 2020, 11:24 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியது.
 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் தகுதிச்சுற்று போட்டி துபாயில் நடந்தது. டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 200 ரன்களை குவித்தது. ரோஹித் சர்மா மற்றும் பொல்லார்டு ஆகிய இருவரும் டக் அவுட்டானாலும், இஷான் கிஷன், டி காக், சூர்யகுமார் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியான பேட்டிங்கால் 200 ரன்களை குவித்தது மும்பை அணி. 

அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 25  பந்தில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு டி காக்கும் சூர்யகுமாரும் இணைந்து 62 ரன்களை குவித்தனர். அடித்து ஆடி அரைசதம் அடித்த சூர்யகுமார் 38 பந்தில் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  அதன்பின்னர் இஷான் கிஷனும் ஹர்திக் பாண்டியாவும் இணைந்து டெல்லி கேபிடள்ஸின் பவுலிங்கை பொளந்து கட்டிவிட்டனர். இஷான் கிஷன் 30 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 55 ரன்களை விளாச, பாண்டியா 14 பந்தில் 5 சிக்ஸர்களுடன் 37 ரன்களை விளாசினார். 20 ஓவரில் 200 ரன்களை குவித்தது மும்பை அணி.

201 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா மற்றும் ரஹானே ஆகிய இருவரையும் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக்கி அனுப்பினார் போல்ட். பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில் தவானை டக் அவுட்டாக்க, ரன்னே அடிக்காமல் 3 விக்கெட்டுகளை இழந்தது டெல்லி அணி.

அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் 12 ரன்களுக்கும் ரிஷப் பண்ட் 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 8 ஓவரில் வெறும் 41 ரன்களுக்கே ஐந்து விக்கெட்டுகளை இழந்து திணறிய டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு, மார்கஸ் ஸ்டோய்னிஸும் அக்ஸர் படேலும் சிறப்பாக ஆடி ஆறுதல் அளித்தனர். அரைசதம் அடித்த ஸ்டோய்னிஸ் 46 பந்தில் 65 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, 33 பந்தில் 42 ரன்கள் அடித்து கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே அடித்து, 57 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

டெல்லி கேபிடள்ஸை அசால்ட்டாக வீழ்த்தி அபார வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, ஃபைனலுக்கு முன்னேறியது. டெல்லி கேபிடள்ஸ் அணி, சன்ரைசர்ஸ் மற்றும் ஆர்சிபி இடையேயான எலிமினேட்டரில் வெற்றி பெற்ற அணியுடன் 2வது தகுதிச்சுற்று போட்டியில் மோதும். 
 

click me!