
ஐபிஎல் 12வது சீசனில் 7வது போட்டியில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது ஆர்சிபி அணி.
நடப்பு சீசனில் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்த சீசனை தொடங்கிய ஆர்சிபி அணிக்கு, இந்த சீசன் மிகுந்த சோகமானதாக அமைந்தது. முதல் 6 போட்டிகளில் ஒன்றில் கூட வெல்ல முடியாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் பஞ்சாப் அணியை நேற்று எதிர்கொண்டது.
நேற்றிரவு 8 மணிக்கு மொஹாலியில் நடந்த இந்த போட்டியில் முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் ஆடியது. பஞ்சாப் அணியின் ராகுல், மயன்க் அகர்வால், சர்ஃபராஸ் கான், சாம் கரன் ஆகியோர் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தனி ஒருவனாக பஞ்சாப் அணியின் ஸ்கோரை உயர்த்தினார் கிறிஸ் கெய்ல். கிறிஸ் கெய்ல் அதிரடியாக ஆடி 64 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 99 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தும், ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். கெய்லின் பொறுப்பான பேட்டிங்கால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 173 ரன்களை குவித்தது.
174 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் கோலியும் பார்த்திவ் படேலும் அதிரடியாக தொடங்கினர். 9 பந்துகளில் 19 ரன்கள் அடித்து பார்த்திவ் அவுட்டானார். அதன்பின்னர் விராட் கோலியுடன் டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். தலைசிறந்த அனுபவ வீரர்களான இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆர்சிபி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். இருவரும் களத்தில் நிலைத்து நின்றதுமே ஆர்சிபி அணியின் வெற்றி உறுதியானது. அரைசதம் கடந்த கோலி 67 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டிவில்லியர்ஸுடன் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஜோடி சேர்ந்தார்.
ஸ்டோய்னிஸின் கேட்ச்சை சர்ஃபராஸ் ஒருமுறையும் முருகன் அஷ்வின் ஒருமுறையும் தவறவிட்டனர். களத்திற்கு வந்ததும் மந்தமாக தொடங்கினாலும் பின்னர் ஸ்டோய்னிஸ் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். மறுமுனையில் டிவில்லியர்ஸ் நின்றதால் ஸ்டோய்னிஸுக்கு அழுத்தம் ஏற்படவில்லை. அதிரடியாக ஆடிய டிவில்லியர்ஸும் அரைசதம் கடந்தார். கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் இலக்கை எட்டி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது ஆர்சிபி அணி. ஆட்டநாயகனாக டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.