தோனிக்கு ஒண்ணுனா நான் வருவன்டா.. தலக்கு ஆதரவா குரல் கொடுத்த தாதா

By karthikeyan VFirst Published Apr 13, 2019, 5:11 PM IST
Highlights

தோனியின் விதிமீறிய செயல் கடும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சந்தித்தது. தோனியின் செயலுக்கு பல முன்னாள் வீரர்களும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
 

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் கடைசி பந்தில் சிஎஸ்கே அணி திரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 151 ரன்கள் எடுத்தது. 152 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி, 24 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. எனினும் தோனி-ராயுடு ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தாலும் கடைசி நேர ஜடேஜா, சாண்ட்னெரின் சிக்ஸராலும் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது சிஎஸ்கே. 

கடைசி ஓவரில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் இரண்டு பந்துகளில் 9 ரன்கள் எடுக்கப்பட்டது. மூன்றாவது பந்தில் தோனியை கிளீன் போல்டாக்கினார் ஸ்டோக்ஸ். எஞ்சிய 3 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஸ்டோக்ஸ் 4வது பந்தை ஃபுல் டாஸாக வீசினார். ஆனால் அந்த பந்தை அம்பயர் நோ பால் என அறிவிக்க முயன்று கையை நீட்டிவிட்டார். ஆனால் ஃபுல் டாஸ் உயரமாக செல்லும் நோ பாலை லெக் அம்பயர் தான் அறிவிக்க வேண்டும். பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு இறங்கி ஆடியதால் அவர் நோ பால் இல்லை. அதனால் லெக் அம்பயர் நோ பால் கொடுக்கவில்லை. அதற்குள் அவசரப்பட்டு மற்றொரு அம்பயர் கையை நீட்டிவிட்டார். அதனால் பிரச்னை வெடித்தது. ஜடேஜா அம்பயருடன் வாக்குவாதம் செய்தார். அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே கேப்டன் தோனி மைதானத்துக்குள் நுழைந்து அம்பயர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அது நோ பாலா இல்லையா என்பது லெக் அம்பயர் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் மற்றொரு அம்பயர் அவசரப்பட்டதால் பிரச்னை வெடித்தது. போட்டி நடக்கும்போது வெளியில் இருக்கும் வீரர்களோ கேப்டனோ மைதானத்துக்குள் செல்லக்கூடாது. தோனி போட்டியின் இடையே மைதானத்துக்குள் சென்று அம்பயர்களுடன் வாதிட்டதால், ஐபிஎல் விதிமீறலுக்காக போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது. 

தோனியின் விதிமீறிய செயல் கடும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சந்தித்தது. தோனியின் செயலுக்கு பல முன்னாள் வீரர்களும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இதுகுறித்து டுவீட் செய்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், தோனியின் செயலுக்கு ஆட்டத்துக்கு நல்லதல்ல. களத்துக்கு வெளியில் இருக்கும் கேப்டன் உள்ளே செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று பதிவிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். 

அம்பயர் நோ பால் கொடுத்தால்கூட, அந்த முடிவிலிருந்து பின்வாங்க அம்பயருக்கு உரிமை இருக்கிறது. அப்படியிருக்கையில் தோனி இந்த விவகாரத்தை கையாண்ட விதம் ஆச்சரியமளிக்கிறது என்று ஹேமங் பதானி தெரிவித்திருந்தார்.

இந்த ஐபிஎல் சீசனில் அம்பயர்களின் செயல்பாடுகள் சரியில்லை. நோ பால் கொடுக்கப்பட்டு பின்னர் அந்த முடிவு வாபஸ் பெறப்பட்டது. எனினும் எதிரணியின் கேப்டனான தோனி களத்திற்குள் செல்வதற்கு உரிமையில்லை. தோனி தவறான முன்னுதாரணத்தை அமைத்து கொடுத்துள்ளார் என்று ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்தார். 

நினைத்த போதெல்லாம் களத்துக்குள் செல்வதற்கு இது ஒன்றும் ஊரில் ஆடும் கிரிக்கெட் அல்ல. தோனி அவ்வப்போது தான் ஒரு வீரர் என்பதை மறந்துவிட்டு ஆஃபிசர் போல நடந்துகொள்கிறார். வீரர்களால் அம்பயர்களை கட்டுப்படுத்த முடியாது என்பதை தோனி உணர வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் டைட் கடுமையாக விமர்சித்திருந்தார். 

இவ்வாறு பலரும் பலவிதமாக தங்களது எதிர்ப்பை பதிவுசெய்த நிலையில், தோனிக்கு ஆதரவாக முன்னாள் கேப்டன் கங்குலி குரல் கொடுத்துள்ளார். எல்லாருமே மனிதர்கள் தான்;(அதனால் சில தவறுகள் நடக்கத்தான் செய்யும் என்கிற ரீதியாக சொல்லியுள்ளார்) ஆனாலும் அதில்கூட தோனியின் போட்டி மனப்பான்மை வெளிப்பட்டது மிகச்சிறந்தது என்று தோனிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். 
 

click me!