CSK vs RR: நீயா நானா போட்டியில் சிஎஸ்கேவை அசால்ட்டா வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Oct 19, 2020, 10:55 PM IST
Highlights

சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாமிடத்திற்கு முன்னேறியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
 

ஐபிஎல் 13வது சீசனின் புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் இருந்த சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 2 அணிகளும் இன்றைய போட்டியில் மோதின. 

பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் மோதிய இந்த போட்டி அபுதாபியில் நடந்தது. அதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக டுப்ளெசிஸும் சாம் கரனும் இறங்கினர். டுப்ளெசிஸ், ஆர்ச்சர் வீசிய 3வது ஓவரின் கடைசி பந்தில் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த ஷேன் வாட்சன், கார்த்திக் தியாகி  வீசிய 4வது ஓவரின் நான்கு மற்றும் ஐந்தாவது பந்துகளில் பவுண்டரி அடித்து அந்த ஓவரின் கடைசி பந்தில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் சாம் கரன் 22 ரன்களிலும் ராயுடு 18 ரன்களிலும் ஆட்டமிழக்க, 10 ஓவரில் 56 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் தோனியும் ஜடேஜாவும் ஜோடி சேர்ந்தனர். மிடில் ஓவர்களில் டெவாட்டியா மற்றும்  ஷ்ரேயாஸ் கோபால் ஆகிய 2 லெக் ஸ்பின்னர்களிடம் விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதற்காக தோனி மிகக்கவனமாக ஆட ரன்வேகம் குறைந்தது.

தோனி, ஜடேஜா ஆகிய இருவருமே மந்தமாக ஆடியதால், அவர்கள் பார்ட்னர்ஷிப் பயனில்லாததாகிவிட்டது. 7.4 ஓவரில் இருவரும் இணைந்து வெறும் 51 ரன்கள் மட்டுமே அடித்தனர். லெக் ஸ்பின்னர்களிடம் விக்கெட்டை இழந்துவிடாமல் நின்றுவிட்டால், டெத் ஓவர்களில் அடித்து ஆடிக்கொள்ளலாம் என்ற நினைப்பில் இருந்த தோனி 18வது ஓவரின் நான்காவது பந்தில் 28 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார்.

தோனி 28 பந்தில் 28 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழக்க, களத்தில் நிலைத்து நின்ற ஜடேஜா, வழக்கம்போலவே டெத் ஓவர்களில் ஒரு சில பவுண்டரிகளை அடிக்க, 20 ஓவரில் சிஎஸ்கே அணி வெறும் 125 ரன்கள் மட்டுமே அடித்து 126 ரன்கள் என்ற எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்துள்ளது. ஜடேஜா 30 பந்தில் 35 ரன்களும் கேதர் ஜாதவ் 7 பந்தில் 4 ரன்களும் அடித்தனர். 

126 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் 19 ரன்களிலும், ராபின் உத்தப்பா 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, சஞ்சு சாம்சன் மறுபடியும் சொதப்பி, ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார்.

இலக்கு எளிது என்பதால் விக்கெட்டை இழந்துவிடாமல் ஆடினாலே வெற்றி பெற்றுவிடலாம் என்பதால், பட்லரும் ஸ்மித்தும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். ஸ்மித் விக்கெட்டை இழந்துவிடாமல், பட்லருக்கு ஒத்துழைப்பு மட்டுமே கொடுக்க, பட்லர் அடித்து ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி தெறிக்கவிட்டார்.

பட்லர் அடித்து ஆடியதால், ஸ்மித் நிதானமாக ஆடியது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதுமட்டுமல்லாது இலக்கும் மிக எளிது என்பதால், இருவரும் தெளிவாக ஆடி 18வது ஓவரில் இலக்கை எட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற செய்தனர். 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்திற்கு முன்னேறியது. பட்லர் 70 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்று அசத்தினார்.
 

click me!