CSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே

Published : Oct 19, 2020, 09:28 PM IST
CSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே

சுருக்கம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 ஓவரில் வெறும் 125 ரன்கள் மட்டுமே அடித்து 126 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது சிஎஸ்கே.  

ஐபிஎல் 13வது சீசனின் புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் இருக்கும் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 2 அணிகளும் இன்றைய போட்டியில் மோதுகின்றன. 

பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் தான் இரு அணிகளும் களமிறங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக டுப்ளெசிஸும் சாம் கரனும் இறங்கினர். டுப்ளெசிஸ், ஆர்ச்சர் வீசிய 3வது ஓவரின் கடைசி பந்தில் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த ஷேன் வாட்சன், கார்த்திக் தியாகி  வீசிய 4வது ஓவரின் நான்கு மற்றும் ஐந்தாவது பந்துகளில் பவுண்டரி அடித்து அந்த ஓவரின் கடைசி பந்தில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் சாம் கரன் 22 ரன்களிலும் ராயுடு 18 ரன்களிலும் ஆட்டமிழக்க, 10 ஓவரில் 56 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் தோனியும் ஜடேஜாவும் ஜோடி சேர்ந்தனர். மிடில் ஓவர்களில் டெவாட்டியா மற்றும்  ஷ்ரேயாஸ் கோபால் ஆகிய 2 லெக் ஸ்பின்னர்களிடம் விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதற்காக தோனி மிகக்கவனமாக ஆட ரன்வேகம் குறைந்தது.

தோனி, ஜடேஜா ஆகிய இருவருமே மந்தமாக ஆடியதால், அவர்கள் பார்ட்னர்ஷிப் பயனில்லாததாகிவிட்டது. 7.4 ஓவரில் இருவரும் இணைந்து வெறும் 51 ரன்கள் மட்டுமே அடித்தனர். லெக் ஸ்பின்னர்களிடம் விக்கெட்டை இழந்துவிடாமல் நின்றுவிட்டால், டெத் ஓவர்களில் அடித்து ஆடிக்கொள்ளலாம் என்ற நினைப்பில் இருந்த தோனி 18வது ஓவரின் நான்காவது பந்தில் 28 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார்.

தோனி 28 பந்தில் 28 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழக்க, களத்தில் நிலைத்து நின்ற ஜடேஜா, வழக்கம்போலவே டெத் ஓவர்களில் ஒரு சில பவுண்டரிகளை அடிக்க, 20 ஓவரில் சிஎஸ்கே அணி வெறும் 125 ரன்கள் மட்டுமே அடித்து 126 ரன்கள் என்ற எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.

ஜடேஜா 30 பந்தில் 35 ரன்களும் கேதர் ஜாதவ் 7 பந்தில் 4 ரன்களும் அடித்தனர். இந்த போட்டியில் சிஎஸ்கே அணி சார்பில் சாம் கரன் மட்டுமே ஒரேயொரு சிக்ஸர் அடித்தார். மேலும், இந்த சீசனில் இதுவரை ஆடிய போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி மிகக்குறைவான ஸ்கோர் இதுதான். 126 ரன்கள் என்ற எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எளிதாக அடித்துவிடும்.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை! ஆர்சிபி டாப், கொல்கத்தா வெளியேற்றம்!
போனால் போகட்டும்! வெளிநாட்டு பிளேயர்கள் குறித்து கூலாக பதில் சொன்ன IPL நிர்வாகம்