
நடந்துவரும் ஐபிஎல் 12வது சீசனிலும் ஆர்சிபி அணியின் சோகம் தொடர்கிறது.
ஐபிஎல்லில் இதுவரை 11 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. 12வது சீசன் நடந்துவருகிறது. ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கி ஏமாற்றத்துடன் தொடரை முடிக்கிறது.
விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய இரு ஜாம்பவான்கள் ஒரு அணியில் இருந்தும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்குக்கூட தகுதி பெறவில்லை. கடந்த சீசன் மோசமாக இருந்த நிலையில், இந்த சீசனிலாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு, சிஎஸ்கேவிடம் தொடங்கிய தோல்வி முகம் இன்னும் தொடர்கிறது.
முதல் நான்கு போட்டிகளிலும் தோற்ற ஆர்சிபி, கேகேஆர் அணியை நேற்று எதிர்கொண்டது. ஆர்சிபி நிர்ணயித்த 206 ரன்கள் என்ற இலக்கை ஆண்ட்ரே ரசலின் கடைசி நேர காட்டடியால் எளிதாக எட்டி வெற்றி பெற்றது கேகேஆர் அணி.
ஆர்சிபி அணி சில விஷயங்களை மாற்றியே ஆக வேண்டும். ஆடும் லெவனில் சிறந்த வீரர்களை தேர்வு செய்வது கோர் அணியை வலுவாக உருவாக்குவது போன்ற பணிகளை செய்தே ஆக வேண்டும். அப்போதுதான் வீரர்களுக்கு இது நம்ம டீம்; நம்ம அணிக்காக நாம் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெற்றி வேட்கையும், ஒரு அணியாக பரஸ்பர புரிதலும் இருக்கும்.
அனைத்து அணிகளிலும் தான் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பவுலிங் பயிற்சியாளர், ஃபீல்டிங் பயிற்சியாளர் என தனித்தனி துறைக்கு தனித்தனி பயிற்சியாளர்கள் உள்ளனர். இவற்றிற்கு அப்பாற்பட்டு ஆலோசகர் என்று ஒருவர் இருக்கிறார். அவர்கள் வீரர்களுடன் இணைந்து போட்டிக்கு முன்னர் திட்டங்களை வகுக்கிறார்கள். போட்டி நடக்கும்போது இருமுறை பிரேக் விடப்படும்போது ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.
ஆனால் ஆர்சிபி அணியில் மட்டும் இது கொஞ்சம் ஓவராக இருக்கிறது. பவுண்டரி லைனில் நிற்கும் கேப்டன் கோலி மற்றும் பவுலர்களுடன் அவ்வப்போது அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளர் நெஹ்ரா வந்து தொண தொணவென பேசிக்கொண்டே இருக்கிறார். தொடர்ச்சியாக அவர்களிடம் ஆலோசனைகளை வழங்கிக்கொண்டே இருக்கிறார். அது வீரர்களுக்கு மேலும் நெருக்கடியை அதிகரிப்பதோடு குழப்பத்தையும் ஏற்படுத்தும். அவர்கள் ஒரு திட்டத்தை வைத்திருந்தால், நெஹ்ரா வந்து ஒன்று கூறும்போது குழப்பம்தான் ஏற்படும்.
களத்திற்கு சென்றுவிட்டால் கேப்டனும் அவரது தலைமையிலான அணியும் பார்த்துக்கொள்ளும். சூழலுக்கு ஏற்ப அவர்கள் திட்டங்களை தீட்டி முடிவுகளை எடுத்து ஆடுவார்கள். அப்படி ஆடினால்தான் வீரர்களுக்கும் தன்னம்பிக்கை. சும்மா சும்மா வந்து வீரர்களுக்கும் கேப்டனுக்கும் ஆலோசனை வழங்குவதை அவர் நல்லதாக நினைத்து செய்துகொண்டிருக்கிறார். ஆனால் அதுதான் அந்த அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணம். அதை நிறுத்தினாலே அந்த அணி வெல்வதற்கு வாய்ப்புள்ளது.