சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார்..? முடிவு பண்ணிட்டார் தோனி

By karthikeyan VFirst Published Sep 6, 2020, 3:24 PM IST
Highlights

சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார் என்பதை தோனி இந்நேரம் முடிவு செய்திருப்பார் என்று சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ட்வைன் பிராவோ தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ளது. அதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளில் முதன்மையானது சிஎஸ்கே. மும்பை இந்தியன்ஸை விட ஒருமுறை குறைவாக ஐபிஎல் டைட்டிலை வென்றிருந்தாலும், ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற ஒரே அணி சிஎஸ்கே தான்.

2008லிருந்து இதுவரை 10 சீசன்களில் ஆடியுள்ள சிஎஸ்கே அணி, அனைத்து முறையுமே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றதுடன், 8 முறை இறுதி போட்டிக்கு முன்னேறி, அதில் 3 முறை கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே ஆதிக்கம் செலுத்த அந்த அணியின் கேப்டன் தோனி மிக முக்கிய காரணம்.

மற்ற ஐபிஎல் அணிகளை போல அல்லாமல், சிஎஸ்கேவை பொறுத்தமட்டில் கிரிக்கெட் தொடர்பான அனைத்து முடிவுகளையும் கேப்டன் தோனியே எடுப்பார். அதற்கான முழு சுதந்திரமும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் அவர் நினைத்தபடி அவரால் செயல்பட முடிகிறது. ஆனால் அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தாமல், கூடுதல் பொறுப்புடன் செயல்பட்டு, சிஎஸ்கே அணியை தகர்க்க முடியாத கோட்டையாக உருவாக்கி வைத்துள்ளார் தோனி. 

ஆனால் தோனி அவரது கெரியரின் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார் என்பதும், தோனி போய்விட்டால் அந்த அணியின் எதிர்காலம் குறித்த கேள்வியும் ரசிகர்களுக்கு உள்ளது. ஆனால் தோனி, சிஎஸ்கேவின் எதிர்காலம் மற்றும் அடுத்த கேப்டன் ஆகிய விஷயங்களை கண்டிப்பாக தீர்மானித்திருப்பார் என்று அந்த அணியின் நட்சத்திர வீரர் ட்வைன் பிராவோ தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாட்டால், துபாயிலிருந்து இந்தியா திரும்பினார். அதனால்தான் ரசிகர்களுக்கு  சிஎஸ்கேவின் எதிர்காலம் குறித்த சந்தேகம் எழுந்தது. ஏனெனில் ரெய்னா இருந்தால், கண்டிப்பாக தோனிக்கு பிறகு கேப்டன்சி அவருக்குத்தான் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இதுகுறித்த முடிவையும்  தோனி தான் எடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. 

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ட்வைன் பிராவோ, சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் குறித்த விஷயம் தோனியின் மனதில் நீண்ட காலமாக ஓடிக்கொண்டிருப்பதை நான் அறிவேன். யாராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் விலகித்தான் ஆகவேண்டும். தோனி கண்டிப்பாக இந்நேரம் அடுத்த கேப்டன் யார் என்பதை தீர்மானித்திருப்பார். அது ரெய்னாவாகவோ அல்லது வேறு யாரும் இளம் வீரராகவோ கூட இருக்கலாம் என்று பிராவோ தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு 3 ஐசிசி கோப்பைகளையும் வென்றுகொடுத்த கேப்டன் தோனி, தனக்கு அடுத்து, இந்திய அணியை சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்தகட்டத்திற்கு அழைத்துச்செல்வது யார் என்று முன்கூட்டியே முடிவெடுத்து விராட் கோலியை வளர்த்தார். அதேபோலவே, சிஎஸ்கேவிற்கான திட்டத்தையும் கண்டிப்பாக தோனி வைத்திருப்பார் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமே இல்லை.

click me!