ஐபிஎல் 2020: இதுல ஆச்சரியப்படுறதுக்கு எதுவும் இல்ல.. சிஎஸ்கேவில் கண்டிப்பா அது நடந்தே தீரும்..!

By karthikeyan VFirst Published Sep 6, 2020, 2:39 PM IST
Highlights

ஐபிஎல்லில் முதல் சில போட்டிகளை தவறவிட்டாலும், பிற்பாதியில் சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா ஆடுவார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் தீப்தாஸ் குப்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. அதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் முன்கூட்டியே அங்கு சென்று, தனிமைப்படுத்தல் காலத்தையெல்லாம் முடித்து, தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. 

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவிற்கு மட்டும் விரும்பத்தகாத சில சம்பவங்கள் நடந்தன. சிஎஸ்கே அணியை 13 பேருக்கு கொரோனா உறுதியானது. அதைத்தொடர்ந்து, சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரும், அந்த அணியின் மேட்ச் வின்னர்களில் ஒருவருமான ரெய்னா, அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாட்டால், இந்தியா திரும்பினார். பின்னர் ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக ஆட  ஆர்வம் தெரிவித்தார். ஆனாலும் அவர் இந்த சீசனில் ஆடுவாரா இல்லையா என்பது உறுதியாகாமல் உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பினாலும், இந்த சீசனிலிருந்து விலகுவதாக அவர் தெரிவிக்கவில்லை. சிஎஸ்கே அணியும் அவரை ஒதுக்கிவைக்கவில்லை. ரெய்னாவுக்கான வாய்ப்பு இன்னும் சிஎஸ்கேவில் இருக்கவே செய்கிறது. ரெய்னாவும் சிஎஸ்கே அணியில் தொடர்ந்து ஆட விரும்புவதாக தெரிவித்திருந்தார். ரெய்னா ஆடுவது குறித்து கேப்டன் தோனி தான் முடிவெடுக்க வேண்டும் என்று அணியீன் உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசன் தெரிவித்தார். 

சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் ஆடுவது குறித்த எந்த அப்டேட்டும் இன்னும் வரவில்லை. ஆனாலும் அவருக்கு மாற்று வீரர் இதுவரை சிஎஸ்கேவில் அறிவிக்கப்படவில்லை. இருக்கின்ற வீரர்களே போதும்; அதை வைத்தே பார்த்துக்கொள்ளலாம் என்று தோனி சொல்லிவிட்டதாக அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரெய்னா கண்டிப்பாக இந்த சீசனில் ஆடுவார்(முதல் சில போட்டிகளில் தவறவிடுவார்) என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார். அதனால் தான் ரெய்னாவுக்கு மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈஎஸ்பின் கிரிக்இன்ஃபோவிற்கு பேசிய தீப்தாஸ் குப்தா, சுரேஷ் ரெய்னா கண்டிப்பாக இந்த ஐபிஎல் சீசனில் ஆடுவார் என்றே கருதுகிறேன். முதல் சில போட்டிகளை தவறவிடக்கூடும். ஏனெனில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தனிமையில் இருக்க வேண்டிவரும். அதனால் ஆரம்பத்தில் சில போட்டிகளை தவறவிட்டாலும், பின்னர் சிஎஸ்கே அணிக்காக ஆடுவார். அதனால் ரெய்னாவுக்கு மாற்று வீரரை சிஎஸ்கே அறிவிக்காதது எனக்கு ஆச்சரியமாக இல்லை என்று தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியில் 2008ம் ஆண்டிலிருந்து ஆடிவரும் ரெய்னா, அந்த அணிக்காக பல சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடி வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். அந்த அணியின் செல்லப்பிள்ளையாகவே இருக்கிறார். ஐபிஎல்லில் அதிகமான போட்டிகளில் ஆடிய வீரர் என்ற பெருமைக்குரியவரான ரெய்னா, ஐபிஎல்லில் 137.14 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 5368 ரன்களை குவித்து, ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்து இரண்டாமிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!