ஐபிஎல் 2020: நீயா நானா போட்டியில் ஆர்சிபியை வீழ்த்தி டெல்லி கேபிடள்ஸ் அபார வெற்றி..!

By karthikeyan VFirst Published Oct 5, 2020, 11:36 PM IST
Highlights

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில்  59  ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் டெல்லி கேபிடள்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபியும் டெல்லி கேபிடள்ஸும் மோதின. இரு அணிகளுமே இந்த போட்டிக்கு முன், தலா 4 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகளை பெற்றிருந்த நிலையில், இந்த போட்டியில் வென்று யார் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிப்பது என்ற போட்டியுடன் மோதின.

துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி கேபிடள்ஸின் தொடக்க வீரர் பிரித்வி ஷா, வழக்கம்போலவே களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆடினார். பவர்ப்ளேயை பயன்படுத்தி அடித்து ஆடிய பிரித்வி ஷா, 23 பந்தில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 47 ரன்களை விளாசி, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் பிரித்வி ஷா அடித்து ஆட, மறுமுனையில் தவான் படுமந்தமாக ஆடினார். ஒருவர் அடித்து ஆடுவதும், ஒருவர் நிலைத்து ஆடுவதும் அணியின் வியூகம் என்றாலும், டி20 போட்டியில் இவ்வளவு மந்தமாக ஆடக்கூடாது. ஆனால் களத்தில் நிலைத்தபின்னர், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் சென்றால், அது அணிக்கு இழப்பாக அமையும் அதைத்தான் தவான் செய்தார். 28 பந்தில் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயரும் 11 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் மார்கஸ் ஸ்டோய்னிஸும் இணைந்து அருமையாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர்.

ரிஷப் பண்ட் 25 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, களத்திற்கு வந்தது முதலே பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 26 பந்தில் ஆறு பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 53 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று டெல்லி கேபிடள்ஸ் அணி 20 ஓவரில் 196  ரன்களை குவித்து 197 ரன்கள் என்ற இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்தது.

197 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச்சுக்கு 2 கேட்ச் வாய்ப்புகள் தவறவிடப்பட்டும், அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இந்த சீசனில் அருமையாக ஆடிவரும் தேவ்தத் படிக்கல்லை 4 ரன்களில் அஷ்வின் வீழ்த்த, அதற்கடுத்த ஓவரிலேயே 13 ரன்களில் ஃபின்ச்சை அக்ஸர் படேல் வீழ்த்தினார்.

அதன்பின்னர் டிவில்லியர்ஸும் அவசரப்பட்டு ரபாடாவின் பந்தை தூக்கியடித்து 9 ரன்களில் ஆட்டமிழக்க, மொயின் அலி 11 ரன்களில் அவுட்டானார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய விராட் கோலியின் மீது அழுத்தம் அதிகரிக்க, அவரும் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஒரே ஓவரில் 2 பவுண்டரி உட்பட 3 பவுண்டரிகளுடன் 11 பந்தில் 17 ரன்கள் அடித்து வாஷிங்டன் சுந்தரும்  அவுட்டானார். விராட் கோலி ஆட்டமிழந்ததுமே, போட்டியின் முடிவு தெரிந்துவிட, 20 ஓவரில் 137 ரன்கள் மட்டுமே அடித்த ஆர்சிபி அணி,  59 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்த சீசனில் 4வது வெற்றியை பெற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி, புள்ளி பட்டியலில்  முதலிடத்தை பிடித்துள்ளது.
 

click me!