ஐபிஎல் 2020: சன்ரைசர்ஸை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ்

By karthikeyan VFirst Published Oct 4, 2020, 8:14 PM IST
Highlights

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் அந்த அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி ஷார்ஜாவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 208 ரன்கள் அடித்தது.

மும்பை இந்தியன்ஸின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா, முதல் ஓவரில் 4வது பந்தில் சிக்ஸர் அடித்து, அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அதன்பின்னர் நல்ல ஷாட்டுகளுடன் நல்லவிதமாக தொடங்கிய சூர்யகுமார் யாதவுக்கு இம்முறையும் பெரிய இன்னிங்ஸ் ஆடும் கொடுப்பனை கிடைக்கவில்லை. சூர்யகுமார் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் 2 இடது கை பேட்ஸ்மேன்களான டி காக்கும் இஷான் கிஷனும் இணைந்து அருமையாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 8 என்கிற அளவில் இருந்த ரன்ரேட்டை 12வது ஓவர்வாக்கில் 10 என்கிற அளவிற்கு உயர்த்தினர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த டி காக் 39 பந்தில் 67 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் இஷான் கிஷனும் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஷார்ஜா சிறிய மைதானம் என்பதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொல்லார்டும் ஹர்திக் பாண்டியாவும் பெரியளவில் சிக்ஸர் மழை பொழியவில்லை. 13 பந்தில் 3 சிக்ஸர்களுடன் பொல்லார்டு 25 ரன்கள் அடித்தார். பாண்டியா 19 பந்தில் 28 ரன்கள் மட்டுமே அடித்தார். கடைசி ஓவரின் 2வது பந்தில் ஹர்திக் பாண்டியா அவுட்டாக, அதன்பின்னர் களத்திற்கு வந்த க்ருணல் பாண்டியா, கடைசி 4 பந்தில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசி, மும்பை இந்தியன்ஸ் அணி 208 ரன்களை எட்ட உதவினார்.

209 ரன்கள் என்பது கடினமான இலக்கு என்றாலும், ஷார்ஜா மைதானம் சிறியது என்பதால் இந்த இலக்கு எட்டக்கூடியதுதான். ஆனாலும் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் பேர்ஸ்டோ அதிரடியாக தொடங்கினார். ஆனால் அவரை 25 ரன்களில் வெளியேற்றினார். அதன்பின்னர் களத்திற்கு வந்து வார்னருடன் ஜோடி சேர்ந்த மனீஷ் பாண்டேவும் அதிரடியாக தொடங்கினார். 19 பந்தில் 30 ரன்கள் அடித்த அவரை பாட்டின்சன் வீழ்த்த, வில்லியம்சன் 3 ரன்களில் போல்ட்டின் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய வார்னர் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் 16வது ஓவரில் வார்னரை 60 ரன்களில் பாட்டின்சன் வீழ்த்தினார். வார்னரின் கேட்ச்சை ஷார்ட் ஃபைன் லெக் திசையில் நின்ற இஷான் கிஷன் அருமையாக கேட்ச் பிடித்தார். வார்னர் ஆட்டமிழந்ததுமே போட்டி சன்ரைசர்ஸிடமிருந்து பறிபோனது. இதையடுத்து 20 ஓவரில் 174 ரன்கள் மட்டுமே அடித்த சன்ரைசர்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த சீசனில் மூன்றாவது வெற்றியை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, ஆறு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் அணிகளும் ஆறு புள்ளிகளை பெற்றிருந்தாலும், நெட் ரன்ரேட் அதிகமாக இருப்பதால், மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்தை பிடித்தது.
 

click me!