சிஎஸ்கேவிற்கு ஹாட்ரிக் தோல்வி.. சன்ரைசர்ஸிடம் சரணடைந்த சிஎஸ்கே

By karthikeyan VFirst Published Oct 2, 2020, 11:58 PM IST
Highlights

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்தது.
 

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கேவும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர், பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோவை அருமையான இன்ஸ்விங்கின் மூலம் க்ளீன் போல்டாக்கி அனுப்பினார் தீபக் சாஹர். அதன்பின்னர் களத்திற்கு வந்த மனீஷ் பாண்டே, ஒரு சில பெரிய ஷாட்டுகளை ஆடி அசத்தினார். ஆனால் வழக்கம்போலவே அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 21 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் வார்னர் 11வது ஓவரில் 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதே ஓவரில் வில்லியம்சன் 9 ரன்களுக்கு ரன் அவுட்டானார். 11 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி  69 ரன்களுக்கே முக்கியமான 4 விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. 

ஆனால் அதன்பின்னர் இளம் வீரர்களான பிரியம் கர்க்கும் அபிஷேக் ஷர்மாவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடினர். 12, 13, 14 ஆகிய ஓவர்களில் நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் பில்ட் செய்த கர்க்கும் அபிஷேக்கும் அதன்பின்னர் அடித்து ஆடினர்.

குறிப்பாக சாம் கரன் வீசிய 17வது ஓவரில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களை விளாசினார் பிரியம் கர்க், அருமையாக ஆடி அரைசதம் அடித்த கர்க், கடைசிவரை களத்தில் நின்று 26 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 51 ரன்கள் அடித்தார். அபிஷேக் ஷர்மா 31 ரன்கள் அடித்து 19வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரை ஷர்துல் தாகூர் சிறப்பாக வீசி வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் தாகூர். இதையடுத்து 20 ஓவரில் 164 ரன்கள் அடித்தது. 

165 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ஷேன் வாட்சனும் டுப்ளெசிஸும் களமிறங்கினர். ஷேன் வாட்சன் வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, கடந்த 2 போட்டிகளில் ஆடாமல் பெரும் எதிர்பார்ப்புடன் களத்திற்கு வந்த ராயுடுவும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். டுப்ளெசிஸ் 22 ரன்னிலும், கேதர் ஜாதவ் 10 பந்தில் வெறும் 3 ரன் மட்டுமே அடித்தும் ஆட்டமிழக்க, 8.2 ஓவரில் வெறும் 42 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட சிஎஸ்கே அணிக்கு அழுத்தம் அதிகரித்தது.

அதன்பின்னர் தோனியும் ஜடேஜாவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்திய தோனியும் ஜடேஜாவும் மிடில் ஓவர்களில் ஸ்கோர் செய்ய தவறிவிட்டனர். சிங்கிள் ரொடேட் செய்து கூட ஆடவில்லை. ரஷீத் கான், சமத் ஆகியோரின் பவுலிங்கில் அதிகமான பந்துகளில் சிங்கிள் கூட எடுக்காமல் ஆடினர். அதனால் கடைசி ஐந்து ஓவர்களில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு 87 ரன்கள் தேவைப்பட்டது. 

அதன்பின்னர் அதிரடியாக ஆடி ஜடேஜா அரைசதம் அடித்தபோதிலும், கடைசி வரை நின்று அணியை கரை சேர்க்காமல் அரைசதம் அடித்த மாத்திரத்தில் 50 ரன்களில் ஆட்டமிழக்க, தோனி கடைசி வரை களத்தில் இருந்தும் கூட, சிஎஸ்கேவால் 20 ஓவரில் 157 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதையடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த சீசனில் 2வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் நான்காமிடத்திற்கு முன்னேறியுள்ளது சன்ரைசர்ஸ் அணி. சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை பெற்று, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
 

click me!