
ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கேகேஆர் அணி ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்த சீசனில் இதுவரை ஆடிய 4 போட்டிகளில் 3ல் கேகேஆர் அணி வென்றுள்ளது. டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் தோல்வியடைந்தது. கேகேஆர் அணியின் வெற்றிக்கு அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் தான் முக்கியமான காரணம்.
பின்வரிசையில் இறங்கும் ரசல், எல்லா போட்டிகளையுமே வெற்றிகரமாக முடித்துவைக்கிறார். ஐபிஎல்லின் மிகச்சிறந்த ஃபினிஷராக திகழ்கிறார் ரசல். அணியில் தனது கடமையை உணர்ந்து செயல்படுகிறார் ஆண்ட்ரே ரசல். டெத் ஓவர்களில் காட்டடி அடித்து கேகேஆர் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்திவிடுகிறார்.
அந்த அணியின் வெற்றிக்கு ரசலின் பங்களிப்பு அளப்பரியது. ஆர்சிபி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கூட கடைசி 4 ஓவர்களில் கேகேஆர் அணிக்கு 66 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மூன்றே ஓவர்களில் அந்த ரன்னை குவித்து அணியை வெற்றி பெற செய்துவிட்டார்.
சூப்பர் ஸ்டிரைக்கர், கேம் சேஞ்சர், ஆட்டநாயகன் ஆகிய மூன்று விருதுகளையுமே ஆண்ட்ரே ரசல் தான் வென்றார். போட்டிக்கு பின்னர் பேசிய ஆண்ட்ரே ரசல், எந்த மைதானமுமே எனக்கு பெரிதானது அல்ல; என்னுடைய வலிமையின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. ஃபுல் டாஸ் பந்துகளை அடிக்கும்போது கண்களுக்கும் கைகளுக்குமான ஒருங்கிணைப்பு மிக முக்கியம் என்றார்.
ஏற்கனவே எதிரணிகளை தெறிக்கவிட்டுக்கொண்டிருக்கும் ரசல், எந்த மைதானமுமே எனக்கு பெரிது இல்லை என்று மீண்டும் மிரட்டியிருக்கிறார்.