‘உங்கள் பெருவிரல் தான் இனி உங்கள் பேங்க்’…புதிய ‘பீம் ஆப்ஸை’ அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி

First Published Dec 31, 2016, 7:05 AM IST
Highlights


‘உங்கள் பெருவிரல் தான் இனி உங்கள் பேங்க்’…புதிய ‘பீம் ஆப்ஸை’ அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி


ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு வெளியாகி 50-வது நாளான நேற்று, டிஜிட்டல்பேமெண்ட்டை ஊக்கப்படுத்தும் வகையில், ‘பிம்’(BHIM) என்ற செயலியை(ஆப்ஸ்) பிரதமர் மோடி நேற்று அறிமுகம் செய்தார்.

ரூபாய் தடை

நாட்டில் கருப்புபணம், கள்ளநோட்டை ஒழிக்கும் வகையில், கடந்த நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அந்த அறிவிப்பினால், கடந்த 50 நாட்களாக மக்கள் பணத்தட்டுப்பாட்டால் பல இன்னல்களை சந்தித்தனர்.

பரிசுகள்

அதேசமயம், சாமானிய மக்கள் முதல் அனைவரும் டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாற வேண்டும் என மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. டிஜிட்டல் பரிமாற்றம் மேற்கொள்ளும் மக்களுக்கு நாள்தோறும் பரிசும், வர்த்தகர்களுக்கு வாரந்தோறும்பரிசுத்திட்டத்தை கடந்த வாரம் வெளியிட்டது.

புதிய செயலி

இந்நிலையில், டிஜிட்டல் பேமெண்ட்ைட முன்னெடுக்கும் அடுத்த முயற்சியாக, ‘பாரத் இன்டர்பேஸ் பார் மணி’ அல்லது ‘பீம்’ எனும் செயலியை பிரதமர் மோடி நேற்று டெல்லியில் அறிமுகம் செய்தார்.

டெல்லியில் நேற்று நடந்த டிஜி-தன் மேளா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அந்த செயலியை அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது-

பெருவிரல் போதும்

இளைஞர்கள் மத்தியில் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையை எளிதாக்கவும், அம்பேத்கரை பெருமைப்படுத்தும் வகையிலும் ‘பீம்’ என்ற அவரின் பெயரில்  மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பீம் செயலி பயன்படுத்த மிக எளிதானது. இந்த செயலியை பயன்படுத்தசெல்போனில் இன்டர்நெட் வசதி தேவையில்லை. உங்கள் கையின் பெருவிரல் மூலம் இதை இயக்கி, பணம் பரிமாற்றம் செய்ய முடியும்.

டிஜிட்டல்மயம்

ரூ.1000 விலையில் விற்பனையாகும் சாதாரன செல்போன்களில் இருந்து கூட பீம்செயலியை செயல்படுத்த முடியும். கல்வியறிவு இல்லாதவர்களும் கூட இந்த செயலியை பயன்படுத்த முடியும். உங்கள் பெருவிரல்தான் இனி உங்கள் வங்கி. மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த 100 நாட்களுக்கு நாள்தோறும் 15 ஆயிரம் மக்களுக்கு ரூ.1000 பரிசு வழங்கப்படும் 

 'பீம்' என்ற செயலி மூலம் நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகமும் நடைபெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை. உலகின் மிகப்பெரிய உன்னத திட்டமாக ‘பீம்' திட்டம் பார்க்கப்படும். ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் என்பதால் இத்திட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

 

 

 

click me!