West Nile fever mosquito வெஸ்ட் நைல் காய்ச்சல்: விழிப்புடன் இருக்க கேரள அரசு அறிவுறுத்தல்!

By Manikanda PrabuFirst Published May 7, 2024, 5:31 PM IST
Highlights

கொசுக்கள் மூலம் பரவும் வெஸ்ட் நைல் காய்ச்சல் தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது

வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் “க்யூலெக்ஸ்” எனப்படும் ஒரு வகை கொசுக்கள் மூலம் பரவுகிறது. இந்தக் கொசுக்கள் அசுத்தமான நீரில் வளரக் கூடியவை. 1937ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் உகாண்டாவில் இந்த வகை பாதிப்பு முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் முதன்முறையாக கேரளாவில் 2011ஆம் ஆண்டு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2019ஆம் ஆண்டில் அம்மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஆறு வயது சிறுவனை வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் பலிகொண்டது.

இந்த நிலையில், கொசுக்கள் மூலம் பரவும் வெஸ்ட் நைல் காய்ச்சல் தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வாகத்தையும் கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது. திருச்சூர், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பதிவாகியுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், அனைத்து மாவட்டங்களும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அம்மாநில காதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

க்யூலெக்ஸ் வகை கொசுக்களால் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் எதிரான விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொசுக்கள் பெருகும் இடங்களை அழித்து, கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்துள்ள அமைச்சர் வீனா ஜார்ஜ், இதுதொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

முக்கிய அறிகுறிகள்


காய்ச்சல், உடல் வலி, தலைவலி, கால் வீக்கம், தலைசுற்றல், நினைவாற்றல் இழப்பு (பெரும்பாலான நோயாளிகளுக்கு இந்த அறிகுறி இருப்பதில்லை) போன்றவை அதன் முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. சிலருக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. மேலும், இக்காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களில் 1 சதவீதம் பேருக்கு மூளை பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் சுயநினைவின்மை மற்றும் சில நேரங்களில் மரணம் ஏற்படலாம். ஆனால், இதேபோன்ற அறிகுறிகளை காட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலுடன் ஒப்பிடும்போது இறப்பு விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.

வாக்குப் பதிவு விவரங்களை 24 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும்: விசிக வலியுறுத்தல்!

வெஸ்ட் நைல் வைரஸுக்கு எதிராக மருந்து அல்லது தடுப்பூசி எதுவும் இல்லாததால், அறிகுறி தென்பட்டவுடனேயே சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதும், தடுப்பு நடவடிக்கைகளும் முக்கியமானது என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உடலை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை அணியுமாறும், கொசுவலைகளை பயன்படுத்துமாறும், வீடு, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, கோழிக்கோடு மாவட்டத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சலால் ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். குழந்தைகள் உட்பட பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் இப்போது நலமாக உள்ளனர், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து புதிய வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை என்று கோழிக்கோடு மாவட்ட கண்காணிப்பு குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்சமயம் ஒரே ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நோயின் அறிகுறிகள் காரணமாக சிகிச்சை பெற்றவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அதன் முடிவுகளில் அவர்களுக்கு வெஸ்ட் நைல் வைரஸால் அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் அனைவரும் தற்போது நலமாக இருக்கிறார்கள் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

click me!