தலை சுத்துது ....! மோடியின் சுயவிளம்பர செலவு ரூ.1100 கோடியாம்...!! - 2 மங்கல்யான் விண்கலம் வாங்கலாமாம்...!!!

First Published Nov 30, 2016, 10:26 AM IST
Highlights


கடந்த இரண்டரை ஆண்டுகளில் பிரதமர் மோடியின் விளம்பரத்துக்காக மத்திய அரசு ரூ. ஆயிரத்து 100 கோடியை செலவு செய்துள்ளது. இந்த தொகையில் செவ்வாய் கிரகத்துக்கு இரண்டு மங்கல்யான் விண்கலத்தை அனுப்பி இருக்கலாம் என்கிறார்கள்.

 அதாவது நாள் ஒன்றுக்கு பிரதமர் மோடியின் சுயவிளம்பரத்துக்காக ரூ.1.4 கோடி மக்கள் பணத்தில், மத்திய அரசால் செலவு செய்யப்படுகிறது.  

உலகமே வியந்த, இந்திய விஞ்ஞானிகளின் சாதனைச் சொல்லப்படும் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கல்யான் விண்கலம்  உருவாக்க நமக்கு ரூ. 450 கோடி செலவானது. ஆனால், பிரதமர் மோடியின் விளம்பரச் செலவின் மூலம் நாம் இரு மங்கல்யான் விண்கலன்களை அனுப்பி இருக்கலாம்,

டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராம்வீர் சிங் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவை ஏற்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. 

பிரதமர் மோடியின் இந்த விளம்பரச் செலவு என்பது, கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி முதல் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி வரை கணக்கில் கொண்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடியின் தொலைக்காட்சி, ஒளிபரப்பு, இணையதளம், உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் வாயிலாக மட்டும் விளம்பரப்படுத்த இந்தச் செலவு  செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், நாளேடு விளம்பரங்கள், பதாகைகள், போஸ்டர்கள், சிறுபுத்தகங்கள், காலண்டர்கள் உள்ளிட்ட அச்சுவடிவில் விளம்பரங்களின் செலவு சேர்க்கப்படவில்லை. 

 உண்மையில் இந்த செலவையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இப்போது தெரிவிக்கப்பட்டுள்ள செலவைக் காட்டிலும் இன்னும் அதிகரிக்கும். 

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, இதுபோல் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கடந்த 2014 ஆண்டு  பிரதமரின் மோடியின் செலவு குறித்து அறிந்து, நாள் ஒன்றுக்கு மோடி விளம்பரத்துக்காக ரூ.16 லட்சம் செலவு செய்கிறார் என, வறுத்து எடுத்தது. 

அதேசமயம், அடுத்த ஆண்டில் ஆம்ஆத்மி ஆட்சிக்கு வந்தவுடன், அந்த கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ,கட்சியின் விளம்பரத்துக்காக கடந்த ஓர் ஆண்டில் ரூ. 526 கோடி செலவு செய்தார் என பதிலுக்கு பாரதியஜனதா கட்சி போட்டு தாக்கியது. 

ஆனால், இப்போது வந்திருக்கும் பிரதமர் மோடியின் விளம்பரச் செலவு குறித்த அரசின் அதிகாரப்பூர்வ தகவல் எதிர்க்கட்சிகளுக்கு “அல்வா” கிடைத்தது போல் அமைந்துவிட்டது. ஏற்கனவே, ரூபாய் நோட்டுவிவகாரத்தில், பிரதமர் மோடி அவைக்கு வந்து நேரடியாக விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்து வருகின்றன.

அவர்களின் வார்த்தை தாக்குதலுக்கு தீனி கிடைத்ததுபோல் மோடி குறித்த இந்த தகவல் அமைந்து இருக்கிறது. 

click me!