டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் நடைபெற்ற விசாரணையின் போது, அவருக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்தது. அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 7ஆம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, தன்னுடைய கைதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் ஜெக்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த முறை வந்தபோது, தேர்தல் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று அமலாக்கத்துறையிடம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் மே 7ஆம் தேதிக்கு (இன்று) வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.
undefined
அதன்படி, தேர்தல் நேரம் என்பதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது தொடர்பாகவும், சிறையில் இருந்தபடியே கோப்புகளில் அவர் கையொப்பமிடுவது தொடர்பாகவும் என இரண்டு முக்கிய விஷயங்களை பரிசீலிப்பது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பான விசாரணையை தொடங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் முன்வைத்த வாதங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் எதிராக தங்களது தரப்பு வாதங்களை முழுமையாக முன்வைக்க வேண்டும் என அமலாக்கத்துறை வாதிட்டது.
வழக்கு விசாரணையின்போது, அரசியலில் பங்கேற்க அனுமதிக்கப்படுவீர்கள் அதே நேரத்தில் உங்களது அரசு கடமைகளையும் செய்வீர்கள் அது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் தானே? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், உங்களை விடுவித்தால் அதன் மூலமாக நீங்கள் அரசு வேலைகளை செய்வதை நாங்கள் விரும்பவில்லை என நீதிபதிகள் தங்கள் தரப்பு கருத்தாக கூறினர்.
உங்களுக்கு ஜாமீன் வழங்குகிறோம் ஆனால் முதல்வராக தொடர்வதில் உடன்பாடு இல்லை என்பதை கெஜ்ரிவால் தரப்பிடம் உச்ச நீதிமன்றம் பல்வேறு வார்த்தைகளில் கூறியது. அதற்கு, அரசின் எந்த வேலைகளும் நிறுத்தப்படக் கூடாது என்ற டெல்லி துணைநிலை ஆளுநரின் நிபந்தனையை தவிர்த்து வேறு எந்த ஒரு அரசு கோப்பிலும் கையெழுத்திடப் போவதில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்தது.
ஆனாலும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள் பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி வழக்கிலும் இதே போன்று தான் நடந்தது என கூறினார்கள். அதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அது உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பு என தெரிவித்தார்.
சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த இளைஞர் கைது!
அதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தங்களால் இறுதி உத்தரவு பிறப்பிக்க முடியும் என்றால் இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியும் என்றனர். இறுதியாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு வருகிற 9ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இன்றைய தினம் நடைபெற்ற விசாரணையின் போது, அவருக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்றைய தினம் இடைக்கால ஜாமின் கிடைத்துவிடும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடைக்கால ஜாமின் எதுவும் வழங்கப்படவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு மே 9ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கூட எடுத்துக் கொள்ள வாய்ப்பு தான், மே 9ஆம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படவில்லை என்றால் அடுத்த வாரம் தான் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.