வதந்தி பரவுவதை தடுக்க முடியுமா? முடியாதா? வாட்ஸ்ஆப் மீது மத்திய அரசு கோபம்!

First Published Jul 20, 2018, 10:12 AM IST
Highlights
Government asks WhatsApp for solutions


வதந்திகள் மற்றும் பொய்யான செய்திகள் பகிரப்படுவது தொடர்பாக, வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாட்ஸ்ஆப் இன்றைய சூழலில், இந்தியா முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்ஃபோன் செயலியாக உள்ளது. பல்வேறு தகவல்களை உடனுக்குடன் பகிர உதவுவதோடு, பல வதந்திகளும், பொய்யான செய்திகளும் பரப்பவும் வாட்ஸ்ஆப் பயன்படுகிறது. இதனை சில ஊடக நிறுவனங்கள், மக்கள் விரோத சக்திகள், அரசியல் இயக்கங்கள் பயன்படுத்தி, பொய்யான செய்திகளை பரப்புகின்றன. அந்த செய்திகளை உண்மை என நம்பி, பொதுமக்களும் மற்றவர்களுக்கு ஃபார்வேர்ட் செய்வதால், நாடு முழுவதும் பொய்ச் செய்திகள் எளிதில் பரவ தொடங்கியுள்ளன. 

இதனால், மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் பெரும் தலைவலி எழுந்துள்ளது. வாட்ஸ்ஆப் செய்திகள் உண்மையோ, பொய்யோ, அவற்றுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. இது அரசு நிர்வாகத்தின் இயக்கத்தை பாதிப்பதால், வாட்ஸ்ஆப் நிறுவனம், வதந்திகள், பொய்ச் செய்திகள் பகிரப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்த தொடங்கியுள்ளது. 

இதுதொடர்பாக, ஏற்கனவே நோட்டீஸ் ஒன்றை மத்திய அரசு அனுப்பியிருந்தது. இந்நிலையில், மீண்டும் தற்போது 2வது முறையாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ஃபார்வேர்ட் ஆப்சனை பயன்படுத்தி பகிரப்படும் பொய்ச்செய்திகளை தடுக்க கூடுதல் நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யும் தனிப்பட்ட நபர்கள் மற்றும் சமூக விரோத குழுக்களை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் உதவ வேண்டும் என்றும், மத்திய அரசு அந்த நோட்டீசில் எச்சரித்துள்ளது. 

எனினும், மத்திய அரசின் கோரிக்கையை செயல்படுத்த, வாட்ஸ்ஆப் நிறுவனம் தயங்கி வருகிறது. தனிப்பட்ட நபர்களுக்கு அதிக சுதந்திரம் உள்ளதால் வாட்ஸ்ஆப் பயன்படுத்த பலரும் விரும்புகின்றனர். ஆனால், அதனை மறந்து தனிப்பட்ட நபர் பகிரும் செய்திகளை கண்காணிக்க தொடங்கினால் அது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை பாதித்துவிடும் என்று வாட்ஸ்ஆப் நிர்வாக தரப்பில் கூறப்படுகிறது. இருந்தாலும் சில புதிய கட்டுப்பாடுகள் விரைவில் விதிக்கப்படலாம் என்பது உறுதியாக தெரிகிறது.

click me!