இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், நாங்கள் ஏற்கனவே 100 இடங்களை தாண்டி விட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 109 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19 தேதி நடைபெற்ற நிலையில், 89 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 26ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று 3ஆவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. 370 இடங்களில் தனித்தும், 400 இடங்களுக்கு மேல் கூட்டணியுடன் வெற்றி பெறவும் பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது.
undefined
இந்த நிலையில், பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 100 இடங்களை தாண்டி விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு சென்ற அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இரண்டு கட்ட தேர்தல்களுக்குப் பிறகு, எங்களின் உள் மதிப்பீட்டின் அடிப்படையில், பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 100 இடங்களை தாண்டி விட்டன. 400 இடங்களில் வெற்றி என்ற எங்கள் உறுதியை நோக்கி நாங்கள் நகர்கிறோம் என்றும் நம்புகிறோம். ஆரம்பப் போக்குகளின்படி, தென்னிந்தியாவில் பாஜகவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.” என்றார்.
400 இடங்களைத் தாண்டியதும் இடஒதுக்கீட்டை பாஜக ஒழித்துவிடும் என்று காங்கிரஸ் தவறான தகவலைப் பரப்பி வருவதாக தெரிவித்த அமித் ஷா, “இந்த விஷயங்கள் ஆதாரமற்றவை, உண்மையற்றவை. SC, ST மற்றும் OBCகளுக்கான இடஒதுக்கீட்டை பாஜக எப்போதும் ஆதரிக்கிறது. அச்சமூகங்களின் பாதுகாவலராக எப்போதும் தனது பங்கை பாஜக வகிக்கும் என்பதையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.” என உறுதியளித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மே தின வாழ்த்து!
அமேதி, ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வேட்பாளராக போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அவர்கள் தேர்தலில் போட்டியிடுவார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பம். அவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறது. உத்தரபிரதேசத்தில் அவர்கள் பாரம்பரிய இடங்களை விட்டுவிட்டு ஓடிவிட்டனர்.” என்றார்.
கர்நாடகாவில் கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதாதளத்தின் ரேவண்ணா குறித்த கேள்விக்கு, “நாட்டின் பெண்கள் சக்தியுடன் நாங்கள் நிற்கிறோம் என்ற பாஜகவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. காங்கிரஸிடம் நான் கேட்க விரும்புவது யாருடைய ஆட்சி? காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. அவர்கள் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? இது மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை என்பதால் நாங்கள் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை, மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணைக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம் என்று எங்களது கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதாதளம் அறிவித்துள்ளது.” என்றார்.