மோடி உங்கள் சொத்து கணக்கை வெளியிட தயாரா? - மம்தா பானர்ஜி ‘சவால்’

First Published Nov 30, 2016, 9:39 AM IST
Highlights


பிரதமர் மோடி தனது கட்சியில் உள்ள எம்.பி.கள், எல்.எல்.ஏ.க்களின் சொத்துக்களை வெளிப்படையாக அறிவிக்க கூறும் முன், அவருடைய சொத்துக்களை வெளியிடஅவருக்கு  துணிச்சல் இருக்கிறதா? என மேற்கு வங்காள முதல்வர் மம்தாபானர்ஜி சவால் விடுத்துள்ளார்.

பேரணி

மத்தியஅரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு நாடுமுழுவதும் மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு எதிராக ஆளும் சமாஜ் வாதி கட்சி நேற்று  பேரணி நடத்தியது. இதில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-

ஹிட்லர், துக்ளக்

 அரசியலமைப்புச்சட்டத்தில் சாமானிய மக்களுக்குக் கொடுத்த உரிமைகளை அவமதித்ததன் மூலம்,  முகமதுபின் துக்ளக், ஹிட்லரை எல்லாம் பிரதமர் மோடி தனது செயல்களால் தோற்கடித்துவிட்டார்.

ரூபாய் நோட்டு அறிவிப்பை திரும்பப் பெறும் வரை நாங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம். இந்த அறிவிப்பால், கடைகள், சந்தைகள், வேளாண் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கிவிட்டன.

துணிச்சல்

பிரதமர் மோடி, தனது கட்சியின் எம்.பி.கள், எம்.எல்.ஏ.களின் வங்கிக்கணக்கை கேட்டு இருக்கிறார். முதலில் பிரதமர் மோடியும், கட்தித் தலைவர் அமித் ஷாவும், தங்களது வங்கிக்கணக்கை பொதுப்படையாக வெளியிடுவது அவசியம். அவர்கள்தான் முதலில் அந்த செயலைத் தொடங்க வேண்டும்.

ரூபாய்நோட்டு அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன், பாரதிய ஜனதா கட்சி பெயரிலும், கட்சித்தலைவர் பெயரிலும், அந்த கட்சியினர் ஏராளமான சொத்துக்களை வாங்கிக்குவித்தனர். இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.

சுதந்திரப்போராட்டம்

ரூபாய் நோட்டு அறிவிப்பு என்பது மிகப்பெரிய ஊழல். அது கருப்பு அவசரநிலை. மக்களுக்கு எதிரான இந்த நடவடிக்ைகக்கு எதிராக மக்கள் திரள வேண்டும். நாட்டின் சுதந்திரத்துக்கு மோடியால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், இது ஒரு சுதந்திரப் போராட்டமாகும்.

இந்தியா என்பது, ஒரு நபரால் ஆளப்படுவது அல்ல, இது கோடிக்கணக்கான மக்களால் ஆளப்படுகிறது. ஆனால், மோடி, மக்கள் மீது சில விஷயங்களை வலுக்கட்டாயமாக திணிக்கிறார். நாட்டில் அவசரநிலை ஏற்பட்டபோது கூட இதுபோன்று நடக்கவில்லை.

நானாக இருந்தால்....

வெளிநாடுகளில் இருக்கும் கருப்பு பணத்தை திரும்பப் கொண்டுவருவேன் என்று மோடி சபதம்செய்தார். அதை நிறைவேற்றுதற்கு பதிலாக, ஏழைமக்களுக்கு துன்பத்தை அளித்து வருகிறார். நான் மட்டும் மோடியின் இடத்தில் இருந்து இருந்தால், ரூபாய் நோட்டு அறிவிப்பை திரும்பப் பெற்று இருப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

click me!