ஏலம் கேட்டது கம்பெனிக்கு கட்டுப்படியாகலையாம்…3-வது முறையாக ஏலத்துக்கு வரும் மல்லையாவின் விமானம்

First Published Nov 27, 2016, 5:23 PM IST
Highlights


மத்திய அரசின் சேவைத் துறைக்கு ரூ.535 கோடி வரி செலுத்தாமல் ஏமாற்றிய வழக்கில், தொழிலதிபர் மல்லையாவின் சொகுசு விமானம் இன்றும், நாளையும்(28,29தேதி) ஏலத்தில் விடப்படுகிறது.

மல்லையாவின் விமானம் ஏலம் விடப்படுவது இது மூன்றாவது முறையாகும், இதற்கு முன் இருமுறை ஏலமிடப்பட்டும், அடிப்படைத் தொகைக்கு கூட ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை.

இது குறித்து மின்னனுமுறையில் ஏலம் விடும் எம்.எஸ்.டி.சி. நிர்வாகம் தரப்பில் கூறப்படுவதாவது, “ சேவைத்துறைக்கு தொழிலதிபர் மல்லையா ரூ. 535 கோடி வரி நிலுவை வைத்துள்ளார். மும்பைஉயர்நீதிமன்றம் விமானத்தின் அடிப்படை விலையை குறைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து மல்லையாவின் சொகுசு விமானத்துக்கான விலையை குறைத்து இருக்கிறோம்.

நீதிமன்றம் உத்தரவிடும் முன் ரூ.152 கோடி அடிப்படை விலையாக நிர்ணயித்து இருந்தோம். ஆனால்,  ஒருவர்கூட ஏலத்தில் பங்கேற்கவில்லை என்பதால், உயர்நீதிமன்றம் தலையிட்டு விலையை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

இந்த முறை ஏலத்தில், உலக அளவில் வர்த்தகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இதற்காக விமானம் வாங்குவதில் ஆர்வமாக இருக்கும் நபர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம்'' என்றார்.

கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட முதல் ஏலத்தில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த அல்னா ஏரோ நிறுவனம் ரூ.1.09 கோடிக்கு ஏலம் கேட்டது. அதன்பின் ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஏலத்தில் அதிகபட்சமாக ரூ. 27 கோடிக்கு ஏலம் போனது. ஆனால், அடிப்படை விலையைக் காட்டிலும் குறைவாக இருந்ததால், ஏலம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

click me!