கர்நாடகாவில் யார் அடுத்த முதலமைச்சர் என்பதை நாய் ஒன்று கணித்துள்ளது.
விலங்குகளின் கணிப்பு என்பது எப்போதும் பேசு பொருளாக இருந்து வருகிறது. அந்த வகையில் FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆக்டோபஸின் கணிப்பு உண்மையானது. இந்த நிலையில் கர்நாடகவில் யார் அடுத்த முதல்வர் என்பதை, நாய் ஒன்று கணித்துள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள அசோகநகரைச் சேர்ந்த கோபி மற்றும் குடும்பத்தினர் பைரவேஸ்வரரின் பக்தர்கள். கோபி குடும்பத்தினர் தங்களுக்கு பிடித்த நாய்க்கு பைரவா என்று பெயரிட்டு அதை கடவுளாக வணங்கி வருகின்றனர். வாரந்தோறும் காலபைரவேஸ்வரருக்கு பூஜை செய்து பின்னர் நாய்க்கும் பூஜை செய்கின்றனர்.
இந்நிலையில் கோபி குடும்பத்தினர் கால பைரவேஸ்வரர் கோவிலில் தங்கள் நாயுடன் வழிபாடு செய்தனர். பின்னர் முதல்வர் வேட்பாளர்களான 3 பேரின் புகைப்படங்களும் நாய் முன் வைக்கப்பட்டன. டி.கே.சிவக்குமார், பசவராஜ பொம்மை, எச்.டி.குமாரசாமி ஆகியோரின் புகைப்படத்தை வைத்து அடுத்த முதல்வர் யார் என்று கேட்கப்பட்டது. அப்போது அந்த நாய் ஹெச்.டி.குமாரசாமியின் புகைப்படத்தை எடுத்தது. இதன் மூலம் ஹெச்.டி குமாரசாமி தான் கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் என்று அந்த நாய் கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இலங்கை செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இனி இந்திய ரூபாயில் பணம் செலுத்தலாம்..
அந்த நாயின் முந்தைய அறிகுறிகள் உண்மையானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நாய்க்கு விசேஷ சக்தி உண்டு, அதனால் அது கொடுக்கும் அறிவுரைகள் உண்மைதான் என்றும் கோபி கூறியுள்ளார். எனினும் கர்நாடக தேர்தலில் அந்த நாயின் கணிப்பு உண்மையாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் களத்தில் உள்ளதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : சூடானில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட முதல் விமானம் டெல்லி வந்தது.. போர் குறித்து இந்தியர்கள் சொன்ன தகவல்