மகாத்மா காந்தி கொலையில் மற்றொரு நபருக்கு தொடர்பு ? உச்ச நீதிமன்றத்தில் மனு

First Published May 29, 2017, 4:18 PM IST
Highlights
In Mahatma Gandhi murder case there is connection for another person


மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதில் நாதுராம்கோட்சே, தவிர்த்து 2-வது நபர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கிறது, அதனால், மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போலீசாரின் அறிக்கையின்படி மகாத்மா காந்தியின் உடல் மீது 3 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததாகக் கூறப்பட்டுள்ள நிலையில், நாதுராம் கோட்சேவுக்கு பக்கத்தில் இருந்து 4-வதாக ஒரு தோட்டா காந்தியின் உடலில் பாய்ந்திருக்கக் கூடும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி கடந்த 1948ம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி நாதுராம் கோட்சே, நாராயண் அப்தே உள்ளிட்ட 6 பேர் திட்டமிட்டு கொலை செய்தனர் என குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில்நாதுராம் கோட்சே, நாராயண் அப்தே இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 1949ம் ஆண்டு, நவம்பர் 15-ந்தேதி தூக்கிலிடப்பட்டனர். வினாயக் தாமோதர் சவார்க்கர்உள்ளிட்ட மற்றவர்கள் மீது போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மும்பையில் ‘அபிநவ் பாரத்’ என்ற அறக்கட்டளை நடத்தி வருபவரும், ஆய்வாளருமான பங்கஜ்பட்நிஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது-

மகாத்மா காந்தியின் கொலையில் உள்ள சதித்திட்டம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த கடந்த 1966ம் ஆண்டு நீதிபதி ஜே.எல். கபூர் தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த ஆணையம் காந்தி கொலையில் புதைந்துள்ள சதித்திட்டங்களை முழுமையாக வௌிக் கொணரவில்லை.

நாதுராம் கோட்சே காந்தியை சுட்டுக்கொல்லும்போது 3தோட்டாக்களை பயன்படுத்தினார் என்று கூறி நீதிமன்றத்தில் அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், என்னுடைய ஆய்வில் கோட்சேவுக்கு பக்கத்தில் இருந்து 4-வது ஒரு புல்லட் ஒன்று காந்தியின் உடம்பில் பாய்ந்துள்ளது. இதை போலீசார் விசாரணையில் குறிப்பிடவில்லை. ஆதலால் மகாத்மா காந்தி கொலை குறித்து மீண்டும் புதிதாக ஒரு விசாரணை  ஆணையம் அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இதற்கிடையே இந்த கொலையில் வினாயக் தாமோதர்சவார்க்கருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி அவரை நீதிமன்றம் விடுவித்தது. இந்த கொலையில் வீரசவர்கருக்கும் தொடர்பு இருக்கிறதா? என மனுதாரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பட்நிஸ் கூறுகையில், “ என்னுடைய ஆய்விலும், ஊடகங்களின் அறிக்கையை ஆய்வு செய்ததிலும், காந்தியின் உடலில் 4 தோட்டாக்கள் செலுத்தப்பட்டது தெரியவருகிறது. 3-வது 4-வது தோட்டாக்கள் இடையே வேறுபாடு என்பது துப்பாக்கியைப் பொருத்தது. கோட்சே அப்போது பயன்படுத்தியது 7 தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கியாகும்’’ எனத் தெரிவித்தார்.

click me!