உத்தர பிரதேசம் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியும், அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும் போட்டியிடுகிறார்கள் என்று காங்கிரஸ் தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் மக்களவை தேர்தலின் இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், இன்னும் 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க கோட்டையாக திகழும் தொகுதியாகும்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து மட்டும் மொத்தம் 80 எம்பிக்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ் கோட்டையான அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உபியில் உள்ள அமேதி மற்றும் ரேபரேலி லோக்சபா தொகுதிகளில் காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
கடந்த தேர்தல்களில் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் அவரது மகள் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என தகவல் கசிந்தது. பிறகு லோக்சபா தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்பு குறைவு என்ற தகவல் வெளியானது. ஆனால் அதுகுறித்த தகவலை காங்கிரஸ் தலைமை உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, “உத்தர பிரதேசம் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியும், அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும் போட்டியிடுகிறார்கள்” என்று காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.